மார்ச்: 04 புனித கசிமிர்

மார்ச்: 04

புனித கசிமிர்
போலந்து நாட்டின் பாதுகாவலர் – (கி.பி.1458-1484)

கசிமிர் அரச குலத்தில் தோன்றியவர். போலந்து நாட்டு அரசனின் 13 பிள்ளைகளில் மூன்றாம் பிள்ளையாகத் தோன்றினார். சிறுவயது முதலாக தம்மை கடுமையாக கட்டுப் படுத்தி வாழ்ந்தவர். வெறுந் தரையில் உறங்கி வந்தார். இரவில் பல மணிநேரம் செபம் செய்வார். இறுதி நாள் வரை கற்பென்னும் புண்ணியத்தில் நிலைத்து நின்றார்.
ஹங்கேரி நாட்டினர் தங்கள் அரசனிடம் வெறுப்பு அடைந்தனர். அப்போது அண்டை நாடாகிய போலந்தின் மன்னனாக இருந்த கசிமிரின் தந்தையிடம் வற்புறுத்திக் கேட்டதால் கசிமிர், ஹங்கேரி நாட்டிற்கும் அரசரானார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பினார். அப்போது அவருக்கு வயது 15 தான். தந்தைக்கு இவர் திரும்பியது பிடிக்கவில்லை. ஆனால் கசிமிர் அதன் பின் ஆட்சிப் பொறுப்பு எதையும் ஏற்க விரும்பவில்லை. தந்தை ஆத்திரம் அடைந்தும் பயனில்லை. கசிமிர் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாதவராகவே இருந்தார். ஓர் அரசனின் மகளை மணந்து கொள்ள வற்புறுத்தப்பட்டபோதும் இசையவில்லை.
அரண்மனை வாழ்வு இவருக்குரியதாயிருந்தும், நலிவுற்றோர், ஒடுக்கப்பட்டோர், ஆதரவற்றோர், விதவைகள், நோயாளிகள், சிறைப்பட்டோர் ஆகிய இவர்களை தேடிச் சென்று தொண்டு புரிந்தார். இவர் கற்பின் மீது கொண்டுள்ள பற்றுதலின் காரணமாக இவர் இறந்து 122 ஆண்டுகளுக்குப் பின் இவரது கல்லறையைத் திறந்த போது இவரது உடல் அழியாதிருந்தது. மேலும் அதிலிருந்து இனிய நறுமணமும் புறப்பட்டது. இவர் தம் வாழ்நாளில் மரியன்னையின் மீது பக்திப்பற்றுதல் கொண்டிருந்தார். “தினமும் வாழ்த்துவோம், ஓ மரியே” என்ற மரியன்னைக்குரிய பாடலை அடிக்கடி பாடி பரவசமடைந்தார். இப்பாடலை ஒருநாள் பலமுறை பாடுவார். இப்பாடலின் மீது அவருக்கிருந்த பற்றுதல் எவ்வளவெனில் தாம் இறந்த பின் தம் உடலுக்கு அருகில் இந்தப் பாட்டு எழுதப்பட்ட ஏடுதான் வைக்க வேண்டுமென விரும்பினார். அவ்விருப்பம் நிறைவேறியது. இவரது உடல் அழியாமல் தோண்டி எடுக்கப்பட்ட போது இந்தப் பாட்டும் அழியாமல் காணப்பட்டது. 23 வயதில் காச நோயின் கொடுமையால் இறைவன் அடி சென்றார்.

02ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்


நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

 
ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.

உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து, நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.

பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

 

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்’ என்று அவரிடம் சொல்வேன்.



நற்செய்தி வாசகம்

 
உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

 
அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார்.

அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.

பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.

அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார்.

உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?’ என்று வினவினார்.

அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.

அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.

ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.

அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம்

சிலாவத்துறைப் பங்கிலுள்ள மறையாசிரியர்க ளுக்கான இரண்டு நாள் தவக்காலத் தியானம் முள்ளிக்குளம் தூய பரலோக அன்னை ஆலயத்தில் 28.02.2018 புதன் கிழமை மாலை தொடக்கம் 01.03.2018 வியாழக்கிழமை மாலை வரை நடைபெற்றது. மேலும் அறிய மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம்

02ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்


இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13ய, 17b-28

 

இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும்விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.

அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை. அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர்.

இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி; “உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறார்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப்போகிறேன்” என்றார்.

யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார். தொலையில் அவர் வருவதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.

அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, “இதோ வருகிறான் கனவின் மன்னன்! நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்றுவிட்டதென்று சொல்வோம்.

அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்” என்றனர். ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, “நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்” என்றார். ரூபன் அவர்களை நோக்கி, “அவன் இரத்தத்தைச் சிந்தாதீர்கள். அவனைப் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளிவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்” என்று சொன்னார்.

ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார். யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு, அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி. பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர்.

அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும், வெள்ளைப் போளத்தையும் அவர்கள் ஒட்டகங்களின்மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, “நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்? வாருங்கள்; இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கை வைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்” என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.

ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 105: 16-17. 18-19. 20-21

பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

 

நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். பல்லவி

அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்.  காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. பல்லவி

மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்; அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.

 

நற்செய்தி வாசகம்

இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43, 45-46

 

அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: “மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக் குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்கiளைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.

தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.

தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.

அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், `இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார்.

அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.

இயேசு அவர்களிடம், ” `கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்ட போது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்துகொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

02ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

 

மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-10

 

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச் செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது.

வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும். இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது; அதனை நலமாக்க முடியாது.

அதனை யார்தான் புரிந்துகொள்வர்? ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்; உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 1: 1-2. 3. 4, 6

பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

 

நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனி தந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.

 

நற்செய்தி வாசகம்

 

இப்பொழுது இலாசர் ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

 

அக்காலத்தில் இயேசு பரிசேயரை நோக்கிக் கூறியது: “செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

அவர், `தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.

அதற்கு ஆபிரகாம், `மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது’ என்றார்.

அவர், `அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார்.

அதற்கு ஆபிரகாம், `மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்’ என்றார்.

அவர், `அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார்.

ஆபிரகாம், `அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்’ என்றார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.