மே:16 புனித ஆண்ட்ரு பொபோலா, சே.ச.

மே:16
புனித ஆண்ட்ரு பொபோலா, சே.ச.
குரு, மறைசாட்சி-(கி.பி.1591-1657)

இவர் போலந்து நாட்டினர். இவரை “ஆன்மாக்களின் திருடன்„ என்று அழைத்தனர் இவரின் பகைவர்கள். இப்பழிச்சொல்லை, இவருக்கு புனித பட்டமளித்த திருத்தந்தை 9ம் பத்திநாதர் மனமகிழ்வோடு பயன்படுத்தினார். “ஆன்மாக்களை வேட்டையாடுபவர்„ என்று அழைத்தார். இவர் குருத்துவப் பணியில் ஈடுபட்ட நாள்களில் போலந்தில் ஒரே குழப்பம். இவர் லித்துவெனியாவில் தான் பணியாற்றினார். அங்கு கிரேக்கப் பிரிவினை சபையினர், வெறியர்கள் போல நடந்தனர். புனிதர் அஞ்சா நெஞ்சத்துடன் பணிபுரிந்தார். ஏழைகளை அவர்களின் குடிசைகளுக்குச் சென்று சந்தித்தார். முறைக்கல்வியை நுனுக்கமாக கற்றுத் தந்தார். போலந்தில் ஒருமுறை பிளேக் நோய் தோன்றியது. அந்த நேரங்களில் எல்லாம் எல்லாருக்கும் எல்லாமாயிருந்து பணியாற்றியதாக திருத்தந்தை 9ம் பத்திநாதர் இவரைப்பற்றி குறிப்பிடுகிறார்.

அந்நாட்டில் இருந்த கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பகாரர்கள் கத்தோலிக்கர்களை வேரோடு அழிக்கத் திட்டமிட்டனர். ஜானேவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் புனிதர் சிக்கிக் கொண்டார். தடிகளால் அடித்தனர். சாட்டையடி கொடுத்தனர். ஒரு குதிரையின் பின் காலில் இவரைக்கட்டி பிணைத்தணர். அந்தக் குதிரையை விரட்டி ஓடவிட்டனர். குதிரை சாலை வழியே இவரை இழுத்துச் சென்றது. கொலைக்களத்தை அடைந்தார். நீ ஒரு கத்தோலிக்க குருவா? ஆம், நான் கத்தோலிக்கனாக விசுவாசத்தில் பிறந்தேன். இதிலே இறக்கவும் விரும்புகிறேன். எனது விசுவாசமே உண்மை விசுவாசம். அதுவே மீட்பளிக்கும். நீங்களோ மனந்திரும்ப வேண்டும். தவம் புரிய வேண்டும். இன்றேல் மீட்பு இல்லை என்றார். இச்சொற்களை அவர்கள் கேட்டபின், அவர்களின் வெறி மென்மெலும் கூடியது. முன்பைவிட பன்மடங்கு வேதனைகள் காத்திருந்தன. மீண்டும் சாட்டையடி, ஒரு கூரிய ஈட்டியால் இவரது தலையில் குத்தி ஈட்டியை நிறுத்தினர். தோலை உரித்தனர். தீப்பந்தம் கொண்டு இவரது நெஞ்சில் காணப்பட்ட காயங்களைச் சுட்டனர். முன்புறமும் பின்புறமும் சுட்டனர். புனிதர் மனத்தளர்ச்சி அடையவில்லை. மாறாக, தமது விசுவாசப்பிரமாணத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவைப் பிடுங்கி எறிந்தனர். கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் துவண்டாலும் பகைவர் இரங்காமல் அடிகள் கொடுக்கவே இவரது தூய ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைத்தார். புனிதர் அடைந்த இத்தகைய பெரும் வேதனைகளை திருத்தந்தை 9ம் பத்திநாதர் இவருக்கு புனிதர் பட்டம் அளித்தபோது உலகிற்கு விடுத்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *