பொதுக்காலம் – 11 வாரம் செவ்வாய்

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 17-29

அந்நாள்களில் நாபோத்து இறந்தபின், திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: “நீ புறப்பட்டு, சமாரியாவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைப் போய்ப் பார். அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அங்குப் போயிருக்கிறான். நீ அவனிடம் சொல்ல வேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நீ அவனிடம் சொல்ல வேண்டியது. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்.” அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, “என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?” என்று கேட்டான். அதற்கு அவர், “ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய். இதோ! நான் உனக்குத் தீங்கு வரச் செய்வேன். உனது வழிமரபை ஒழித்து விடுவேன். உரிமை மக்களாயினும், அடிமைகள் ஆயினும், இஸ்ரயேல் ஆண்மக்களை ஆகாபிடமிருந்து வெட்டி எறிவேன். நெபாற்றின் மகன் எரோபவாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோல், உன் குடும்பத்திற்கும் செய்வேன். ஏனெனில் நீ இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி எனக்குப் பெருஞ்சினம் மூட்டினாய். மேலும் ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்வது: இஸ்ரியேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும். ஆகாபைச் சார்ந்தவர்கள் நகரினுள் மடிந்தால், நாய்களுக்கு இரையாவர்; நகர்ப்புறத்தே இறந்தால், வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்” என்றார். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யுமளவுக்குத் தன்னையே விற்றுவிட்ட ஆகாபைப் போல் கெட்டவன் எவனும் இருந்ததில்லை. ஏனெனில் அவனுடைய மனைவி ஈசபேல் அவனைத் தூண்டி விட்டாள். மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த எமோரியர் செய்துகொண்ட சிலைகளை எல்லாம் வழிபடும் அளவுக்கு அவன் மிகவும் இழிவாக நடந்து கொண்டான். அச்சொற்களை ஆகாபு கேட்டவுடன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு வெற்றுடல்மீது சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்துச் சாக்குத் துணிமீது படுத்தான்; பணிவோடு நடந்துகொண்டான். அப்பொழுது திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: “என் திருமுன் ஆகாபு தன்னைத் தாழ்த்திக் கொண்டதைக் கண்டாயன்றோ? அவன் என் திருமுன் தன்னைத் தாழ்த்திக்கொண்டதால் நான் அவன் வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின்போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச்செய்வேன்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 51: 1-2. 3-4. 9,14

பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்;
என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி

என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்;
என் பாவக் கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
கடவுளே! எனது மீட்பின் கடவுளே!
இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்;
அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: “ `உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, `பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *