நிரந்தர இல்லமொன்றை அமைத்துள்ளனர்.

இந்திய மண்ணலிருந்து மன்னார் மறைமாவட்டத் திற்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அமல உற்பவ அன்னை துறவறசபை அருட்சகோதரிகள் தங்களுக்கான நிரந்தர இல்லமொன்றை மன்னார் சாந்திபுரம் பங்கின் பணி எல்லைக்குள் அமைந்துள்ள சவுத்பார் என்னும் பகுதியில் அமல அன்னை நகர் என்னும் இடத்தில் அமைத்துள்ளனர்.
மேலும் அறிய நிரந்தர இல்லமொன்றை அமைத்துள்ளனர்.

ஜீன்:06 புனித நார்பெட்

ஜீன்:06
புனித நார்பெட்
ஆயர் – (கி.பி. 1080-1134)

இவர் அரசகுலத்தில் தோன்றியவர். ஆழமான அறிவுத்திறமையுடையவர். ஆழ்ந்த தெய்வபக்தியின் காரணமாக இளமையிலே குருத்துவத்தை இவர் விரும்பினார். ஆனால் இளைஞரானதும் அரண்மனையில் பிரபுக்கள் போன்ற உயர்ந்த குலத்தாரோடு சேர்ந்து உலக இன்பங்களை நாடியதால் குருவாகும் ஆசை குலைந்துவிட்டது. ஒருமுறை இவர் குதிரையின் மீது ஏறி வேறு ஊருக்குச் செல்கையில் எதிர்பாராமால் புயல்காற்று அடித்து இடி மின்னல் உண்டானது. இவருக்கு முன் இடிவிழவே குதிரை மிரண்டு அவரைக் கீழே தள்ளியது. ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்? என்று இவர் அலறினார். உடனே விடை கிடைத்தது. தீமையை நீக்கு. நன்மை செய்யப் புறப்படு. அமைதியைத் தேடி கண்டுபிடி என்ற குரல் கேட்டது. அதன்பின் புனித பவுலைப்போல் இவரும் மனந்திரும்பினார். தம்முடைய வாழ்நாள்களை தேவ ஊழியத்தில் செலவழிக்க உறுதி பூண்டார்.

இறையியல் கற்று குருப்பட்டம் பெற்றார். தமக்குரிய செல்வங்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார். கடுந்தவம் புரிந்து நாள்தோறும் ஒருமுறை மட்டும் உணவருந்தி புனிதராய் வாழ்ந்தார். இறை ஏவதலின்படி ஒரு புதுத்துறவற சபையை நிறுவினார். புனித நார்பர்ட் ஆன்ட்வெர்ப் நகரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் இந்த நகர மக்கள் பலர் ஒரு தவறான கொள்கையை கடைப்பிடித்து வருவதைக் கண்ட இவர் தமது அரும்பெரும் முயற்சியால் அவர்களை நல்வழிப்படுத்தினார். அதன்பின் இவர் மாக்டபர்க் நகரின் பேராயராக நியமனம் பெற்றார். அங்கே தோன்றியிருந்த பல ஊழல்களை நீக்கினார்.

ஜேர்மன் நாட்டு அரசரான லோத்தேர் என்பவருக்கு ஆலோசகராக பணியாற்றினார். மாக்டபர்க் நகருக்கு பேராயராக நியமிக்கப்பட்ட அவர் அந்நகருக்குள் முதன்முறையாக வந்தபொழுது தாழ்ச்சியின் பொருட்டு மிதியடியின்றி பேராலயத்திற்குள் நுழைந்தார். பின்னர் பேராயரின் இல்லத்திற்குள் நுழைய வந்த பொழுது வாயிற்காப்போன் இவர் யாரென்று புரிந்து கொள்ளாத காரணத்தால் இசைவுதர மறுத்தான். ஏனெனில் ஓர் ஏழையைப் போல் இவர் தோற்றமளித்தார். அப்போது வாயிற்காப்போனை நோக்கி உண்மையில் நீ தான் என்னைப் புரிந்து கொண்டாய். எனது நிலையை அறிந்து கொள்ளாதவர்கள்தான் என்னை பேராயர் பதவிக்கு உயர்த்தி இந்த இல்லத்திற்கு வர கட்டாயப்படுத்துகிறார்கள். நானோ தகுதியற்றவன். வறியவன். இப்பதவிக்கு சிறிதும் தகுதியற்றவன் என்றார். வாயிற்காப்போன் புனிதரிடம் மன்னிப்புக் கேட்டான். செக்கோஸ்லோவாக்கியா நாட்டினர் இவரை தங்கள் நாட்டின் பாதுகாவலராகத் தெரிந்துகொண்டுள்ளனர். இவர் ஏற்படுத்திய துறவறசபை நார்பெர்டைன் என்று அழைக்கப்படுகிறது. இவர்களின் தனிப்பெரும் பக்தி திவ்விய நற்கருணை நாதருக்கே உரியது. இப்பக்தியை இத்துறவற சபையை நிறுவிய புனிதரே கற்றுத் தந்துள்ளார். இவர் இறந்த மறு நூற்றாண்டில் இவரது சபையைச் சார்ந்த மடங்கள் 500 ஆக காட்சியளித்தன. பெண்களுக்கும் நார்பெர்டைன் சபை தோன்றியுள்ளது. 3ம் சபையினரும் உள்ளனர். 53 வயதில் காலஞ்சென்றார்.

ஆண்டின் பொதுக்காலம் 9ஆம் வாரம் புதன் கிழமை

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3; 6-12

என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூருகின்றேன். உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன். இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்; எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 123: 1-2. 2

பல்லவி: ஆண்டவரே! உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தியுள்ளேன்.

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கி இருப்பதுபோல,
என் கண்களை உயர்த்தியுள்ளேன். பல்லவி

பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல,
எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை,
எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே; என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27

அக்காலத்தில் உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, போதகரே, ஒருவர் மகப்பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்தார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அவர்கள் உயிர்த்தெழும்போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களிடம், உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக, அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்தது இல்லையா? ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி