அந்தோனியார் புரம் பங்கின் புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு

சில ஆண்டுகளுக்கு முன்னர் தேவன்பிட்டிப் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு புதிய பங்காக உருவாக்கப்பட்ட அந்தோனியார் புரம் பங்கின் புதிய தலைமை ஆலயமான தூய அந்தோனியார் ஆலயத்தின் அர்ச்சிப்பு திருவிழாவும், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கான வரவேற்பு நிகழ்வும் நேற்று 01.06.2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மேலும் அறிய அந்தோனியார் புரம் பங்கின் புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு

தூய அந்தோனியார் ஆலய அர்ச்சிப்பு திருநிகழ்வு

அந்தோனியார்புரம் ( இலுப்பக்கடவை/ மன்னார்) தூய அந்தோனியார் ஆலய அர்ச்சிப்பு திருநிகழ்வும், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேர்ருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு வரவேற்பும். 01/06/2018 வெள்ளிக்கிழமை .

ஜீன்:02 – புனித மார்சலினஸ், புனித பீற்றர்

ஜீன்:02
புனித மார்சலினஸ், புனித பீற்றர்
மறைசாட்சிகள் – (கி.பி)

இவர்களின் வீரச்சாவு தொடக்கச் திருச்சபையில் எவ்வளவு போற்றப்பட்டதெனில் திருப்பலி வேளையில் பயன்படுத்தப்படும் மாறாத ஜெபங்கள் என்ற பகுதியில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு காலாங்காலமாக நினைவு கூரப்பட்டனர். மார்சலினஸ் குருத்துவ நிலை அடைந்தவர். பீற்றர் திருச்சபை வழங்கும் பேய்களை ஓட்டும் அதிகாரம் பெற்றவராக தொண்டு புரிந்து வந்தார். இருவரும் தங்களின் வேதவிசுவாசத்திற்காக சிறையில் தள்ளப்பட்டனர். அங்கு ஏற்கனNவெ வேதத்தின் பகைவர்களால் தள்ளப்பட்டிருந்த கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி வந்தனர். சிலரை புதிதாகவும் மனந்திருப்பினர். சிறைக்காவலன் ஆர்த்திமியுஸ் அவர் மனைவி, மகள் ஆகியோர்கூடக் கிறிஸ்துவின் ஒளியை இவர்கள் மூலம் பெற்றுக் கொண்டனர்.

இவர்களின் வீரச்சாவு நாளன்று நாயக்ரா, என்றழைக்கப்படும் காட்டுக்குள் கொண்டு போகப்பட்டனர். இங்கே இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டன. இவர்கள் வெட்டப்படுமுன் இவர்களைப் புதைக்க ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது. உடனே இவர்கள் புதைக்கப்பட்டனர். இந்த இரகசியத்தை கொலைஞனே வெளிக்கொணர்ந்து விட்டார். இவரும் இறுதியில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார்.

லூசில்லா, ஃபிர்மினா என்ற பக்தியுள்ள பெண்கள் இவர்களின் புனித உடல்களை எடுத்து திபூர்சியஸ் புதைக்குழியில் அடக்கம் செய்தனர். மன்னன் கொன்ஸ்தான்தின் கிறிஸ்துவின் ஒளியை பெற்றுக்கொண்டவர். இவர் இக்கல்லறைமேல் பேராலயம் எழுப்பியதுடன் புனித எலேனா என்ற பெயர் கொண்ட தம் தாயையும் இங்கேயே அடக்கம் பண்ணிணார்.

முதல் வாசகம்

திருத்தூதர் யூதா எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 17, 20-25

அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். தூய்மைமிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள். கடவுளது அன்பில் நிலைத்திருங்கள். என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள். நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள். வேறு சிலரை அழிவுத் தீயிலிருந்து பிடித்திழுத்துக் காப்பாற்றுங்கள். மற்றும் சிலருக்கு இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்; ஊனியல்பால் கறைப்பட்ட அவர்களது ஆடையையும் வெறுத்துத் தள்ளுங்கள். வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய், மாட்சியும் மாண்பும் ஆற்றலும் ஆட்சியும் ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 63: 1. 2-3. 4-5

பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்;
என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது;
நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது.பல்லவி

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்;
என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்துகொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். அவர்கள், “ `விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், `பின் ஏன் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். எனவே `மனிதரிடமிருந்து வந்தது’ என்போமா?” என்று தங்களிடையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி