ஏப்ரல்:28 புனித பீற்றர் ~hனல் ஒசியானாத் தீவின் திருத்தூதர், மறைசாட்சி

ஏப்ரல்:28

புனித பீற்றர் ~hனல்
ஒசியானாத் தீவின் திருத்தூதர், மறைசாட்சி-(கி.பி.1803-1841)

பிரான்ஸ் நாட்டில் கெயே நகரில் 1803ம் ஆண்டு இவர் பிறந்தார். புதுநன்மை வாங்கிய நாளன்றே மறைபரப்புப் பணியில் ஈடுபட மாளாத ஆவல் கொண்டார். ஆனால் நாளடைவில் படிப்பதில் ஏற்பட்ட இடையூறுகளினால் அவ்வெண்ணத்தை உதறித்தள்ள முயன்றார். ஆனால் மரியன்னையிடம் மன்றாடினார். எண்ணத்தில் மீண்டும் பற்றுறுதி கொண்டார். 18ம் வயதில் குருமடத்தில் சேர்ந்தார். குருப்பட்டம் பெற்று 4 ஆண்டுகள் கழிந்தபின் மேரிஸ்ட் குருக்கள் துறவற சபையில் சேர்ந்தார். 33ம் வயதில் தம் சபைத் தோழர் ஒருவருடன் ஒசியானியாத் தீவுக்கு மறைரப்புப் பணிக்காக புறப்பட்டார். பசுபிக் பெருங்கடலை ஒட்டிய புத்தானாத் தீவை அடைந்தார். அங்கே கடுமையான வெயிலின் கொடுமைக்கு உள்ளானார். உணவின்றி வருந்தினார். மறைபரப்புப் பணிக்குப் பின் வீடு திரும்பும்போது முற்றிலும் வலிமையிழந்தவராகக் காணப்பட்டார். ஆனால் எப்போதும் மகிழ்ச்சியாகவும் புன்முறுவலுடனும் இருந்தார்.
இவரை அனுகி வந்த அனைவருக்கும் இவரை கடுமையாக துன்புறுத்தியவருக்கும் கூட நன்மை செய்ய சலிக்க மாட்டார் என இவர் தம் தோழர் புகழ்ந்துரைக்கிறார். இதனால் இவரை அறிந்த புத்தானா தீவினர் அனைவரும் “உயர்ந்த உள்ளம்” என்றே அழைத்தனர். இவர் செய்த முயற்சிகளுக்கு ஏற்றவாறு ஞான அறுவடை சிறிதும் கிட்டவில்லை. ஆனால் தம் தலைவர் கிறிஸ்துவை முன்வைத்து அதிகமாக முயன்றார். “விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் மற்றொருவன்” என்று அடிக்கடி கூறுவார். தான் விதைத்தது பயனளிக்காமல் போகாது என்பது அவரது நம்பிக்கை.
மரியன்னை பக்தியின் மாசற்ற வடிவம் இவர். மணிக்கணக்காக மரியன்னையின் மலரடிகளின் முன்னே மண்டியிட்டு இருப்பார். தீவின் தலைவனுடைய மகன் அருள் தந்தை பீற்றரிடம் நெருங்கிய தோழமை கொண்டிருந்ததன் பயனாக திருமுழுக்குப் பெற விரும்பினான். எனவே தீவின் தலைவன் அடியாட்களை அனுப்பி தடிகளால் தந்தை பீற்றரை கடுமையாக தாக்கி அடித்துக் கொன்றான். போதகரைக் கொல்லும் போது கிறிஸ்தவ வேதமும் கொல்லப்படும் எனக் கருதினான். இவர் இறந்த 2 ஆண்டுகளுக்குப் பின் பத்தானா தீவு முழுவதும் கிறிஸ்தவ மறையைத் தழுவியது. இப்போது ஒசியானியாத் தீவுகள் அனைத்திலும் கிறிஸ்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதியினர் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *