பாஸ்கா காலம்-4 வாரம் செவ்வாய்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26

அந்நாள்களில் ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை. அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந்தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்றுவர அனுப்பி வைத்தார்கள். அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார். பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 87: 1-3. 4-5. 6-7

பல்லவி: பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!

நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும் விட
ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. பல்லவி

எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்;
பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து,
`இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.
`இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்;
உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். பல்லவி

மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது,
`இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து
`எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது’ என்பர்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30

அக்காலத்தில் எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *