முத்தரிப்புத்துறை தூய செங்கோல் மாதா பங்குச் சமூகம் நேற்று 13.06.2018 புதன்கிழமை முப்பெரும் நிகழ்வுகளை தமது பங்கில் முன்னெடுத்துச் சென்றனர்.
ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு மாபெரும் வரவேற்பளித்தனார்.
ஆலயத்திற்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டது.
தூய அந்தோனியார் சிற்றாலயத்தை; ஆயர் அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்.1: தமது பங்கிற்கு, மன்னார் மறைமாவட்டத்தைப் பணிப்பொறுப்பேற்றதன்பின் முதன் முதலாக வருகை தந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு மாபெரும் வரவேற்பளித்தனார்.நேற்று மாலை முத்தரிப்புத்துறை நானாட்டான் பிரதான வீதியில் அமைந்துள்ள அரிவி ஆற்றுப்பாலத்தில் வைத்து பங்குத்தந்தை அருட்பணி.எ.டெனி கலிஸ்ரஸ் அடிகளாரும் பங்கின் அருட்பணிப் பேரவையினரும் வரவேற்று, உந்துருளிகள் அணிவகுத்து வர, ஆயர் அவர்களை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் தமது கிராமத்தின் நடுப்பகுதி வரை அழைத்து வர அங்கிருந்து அரிப்பு பாடசாலையின் இசைக்குழு மேற்கத்திய இசைக்கருவிகளின் மகிழ்வொலியோடு ஆலய பிரதான நுழைவாயில் வரை அழைத்து வர, அங்கிருந்து முத்தமிழ்க் கலைஞர்களும், ஊர்ப் பெரியவர்களும் கவிபாடி தங்கள் கரங்களால் அதற்கு தாளமிசைத்து மெரூகூட்டி அழைத்து வந்தனர். ஆலயத்தை வந்தடைந்த பின் ஆயர் அவர்கள் இறைமக்களுக்கு ஆசீர் வழங்கினார்.
- இதனைத் தொடர்ந்து, தற்போதுள்ள மிகப் பெரும் பழைமைவாய்ந்த பங்கு ஆலயம் மக்களின் பயன்பாட்டிற்குப் பேதாமல் இருப்பதால், புதிய ஆலயத்தின் தேவை கருதி புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டது. இறை வேண்டுதலின் பின் ஆயர் அவர்களும் அங்கு வருகை தந்திருந்த முதன்மை விருந்தினர்களும் அடிக்கற்களை நடுகை செய்தனர்.
- இதனைத் தொடர்ந்து முத்தரிப்புத்துறை ஆண்டி ஓடை என்னும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள பகுதியில்: தூய யோசேவ்வாஸ் அவர்களால் நடப்பட்ட திருச்சிலுவை உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தூய அந்தோனியார் சிற்றாலயத்தை; ஆயர் அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார். இங்கு மறையுரையாற்றிய ஆயர் அவர்கள், குடும்பங்களில் தேவ அழைத்தல்கள் பெருகவேண்டுமென்றும், அதற்கு, விலிலியத்தில் சொல்லப்படுகின்ற மக்கட்பேறு, கடவுள் அருளும் செல்வம் என்னும் உண்மையை உணர்ந்து, குடும்பங்களில் பிள்ளைப்பேற்றிற்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு பெருந்தொகையான இறைமக்கள், குருக்கள், துறவிகள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன்,வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் கெரவ பிறிமூஸ் சிராய்வா, சட்டத்தரணியும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றித்தின் தலைவருமான திரு. ஆன்ரன் புனிதநாயகம், முன்னைநாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் திரு.வினோதரலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அனைத்து நிகழ்வுகளையும் ஆலய அருட்பணிப் பேரவையோடும், அருட்சகோதரிகளோடும், மக்களோடும் இணைந்து, பங்குத் தந்தை அருட்பணி.எ.டெனி கலிஸ்ரஸ் அடிகளார் நெறிப்படுத்தி நடாத்தியிருந்தார்.