சில ஆண்டுகளுக்கு முன்னர் தேவன்பிட்டிப் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு புதிய பங்காக உருவாக்கப்பட்ட அந்தோனியார் புரம் பங்கின் புதிய தலைமை ஆலயமான தூய அந்தோனியார் ஆலயத்தின் அர்ச்சிப்பு திருவிழாவும், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கான வரவேற்பு நிகழ்வும் நேற்று 01.06.2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.முதலில் ஆயர் அவர்கள் கத்தாளம்பிட்டிச் சந்தியிலிருந்து உந்துருளிப் பவனியோடு அழைத்து வரப்பட்டார். அதன்பின்னர் அந்தோனியார் புரத்திற்கு செல்லும் வீதியின் மன்னார் சங்குப்பிட்டி பிரதான வீதியிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியிலே; அந்தோனியார்புர பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக்கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயர் அவர்களை அழைத்து வந்து ஆலயத்திற்கு முன் வீதியிலிருந்து சிறுமிகளின் நடனத்தோடு அழைத்துவரப்பட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற சிறிய வரவேற்பைத் தொடர்ந்து, தூய அந்தோனியாhர் திருவிழா தொடக்க நாளுக்கான திருக் கொடியை ஆயர் அவர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, கத்தோலிக்க திருச்சபையின் திருவழிபாட்டு திரு மரபிற்கொப்ப ஆலயத்தினை அர்ச்சித்து திருப்பலியை நிறைவேற்றினார்.
இத் திரு நிகழ்வில் பெருந்தொகையான இறைமக்கள், அரச, அரச சாற்பற்ற மதன்மைப் பணிநிலைப் பணியாளர்கள், துறவிகள், அருட்பணியாளர்கள் எனப் பலரும் கலந்த கொண்டனர். இப் புதிய பங்கின் முதல் பங்குத் தந்தையாகப் பணியாற்றிவரும் அருட்பணி.அ.றஜனிகாந் அடிகளார் அனைத்தையும் சிறப்பாக ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தியிருந்தார்.