நீண்டதொரு விசுவாச, ஆன்மிகப் பாராம்பரியங்களைக் கொண்ட மன்னார், பரப்புக்கடந்தான் தூய கர்த்தர் ஆலயத்தில் வருடாந்தம் தவக்காலத்தின் 6ம் வெள்ளிக்கிழமை நடைபெறும் தவக்காலச் சிறப்பு வழிபாடுகள் இன்று (23.03.2018) வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் நடைபெற்று வருகின்றன.இன்று (23.03.2018) வெள்ளிக்கிழமை காலை 07.30 மணிக்கு மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மனுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் , பல அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு இன்றைய ஆன்மிக வழிபாடுகள் அனைத்தும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பல்லாயிரக் கணக்கான மக்கள் இன்றைய வழிபாடுகளில் பங்கேற்றனர். தங்கள் தவ முயற்சியின் அடையாளமாக, பல பங்குகளியிருந்தும் குழுக்களாகவும், தனியாகவும் பல மைல்கள் கால்நடையாக மக்கள் நேற்றும், இன்றும் ஆலயத்தை வந்தடைந்தனர். அத்தோடு தென்னிலங்கையிலிருந்தும் சிங்கள மொழி பேசுசின்ற பல கத்தோலிக்க மக்களும் இன்றைய வழிபாடுகளில் கலந்து கொண்டனர். இன்றைய வழிபாடுகள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெற்றன.
இவ் ஆலயத்தில் பல் ஆண்டுகளாக மக்களுக்குக் கிடைக்கும் ஆன்மிக நலன்கள், அரும் அடையாளங்கள் அகியவற்றை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் பொருட்டு அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தி பதிவு செய்யப்பட்ட நம்பிக்கையாளர் சாட்சியப் பதிவு ஏடொன்றும் ஆயரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அனைத்து ஆன்மிகச் செயற்திட்டங்களையும், பங்கு மற்றம் ஆலய அருட்பணிப்பேரவையினர், பங்கில் பணியாற்றும் துறவறத்தினரோடு இணைந்து பங்குத் தந்தை அருட்பணி. எ.டெஸ்மன் அங்சலோ அடிகளார் சிறப்பாக நிரல்படுத்தி நெறிப்படுத்தினார்.