தவக்காலம் – 03ஆம் வாரம் – சனி

  முதல் வாசகம்


உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.

 

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6

 

“வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.

 

எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 51: 1-2. 16-17. 18-19

 

பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்.

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

 

ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி

 

சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக! அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

 

`உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்,’ என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

 

பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

 

அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்.

 

ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: `கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’ ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, `கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”

 

இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *