பொதுக்காலம், வாரம் 5 சனி

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 12: 26-32; 13: 33-34

அந்நாள்களில் இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச் சென்றுவிடும். ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால், அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்; என்னைக் கொலை செய்துவிட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள் என்று தன் இதயத்தில் எரொபவாம் சொல்லிக் கொண்டான். இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!என்றான். இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான். இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில் மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர். மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி, லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான். அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை எற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும் தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான். இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர். இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 106: 6-7. 19-20. 21-22


பல்லவி: ஆண்டவரே! உம் மக்கள்மீது இரக்கம் காட்டி என்னை நினைவுகூரும்.

எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.
எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர் செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. பல்லவி

அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;
தங்கள் `மாட்சி’க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். பல்லவி

தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;
காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்;
செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா. : (மாற்கு 8:1-10)

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-10

அக்காலத்தில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்” என்று கூறினார். அதற்கு அவருடைய சீடர்கள், “இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?” என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள் “ஏழு” என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசி கூறிப் பரிமாறச் சொன்னார். அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்; உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *