பிப்ரவரி:11 புனித லூர்து அன்னை

பிப்ரவரி:11
புனித லூர்து அன்னை

 

கி.பி.1858ம் ஆண்டு பிப்ரவரி 11ல் தென் பிரான்ஸ் நாட்டில் பிரனீஸ் மலையடிவாரத்தில் லூர்து என்ற சிற்றூருக்கு அருகில் குன்றுகளிற்கிடையே முதன்முறையாக பெர்நதத் சுபீரு என்ற நாட்டுப்புறத்து 14 வயது சிறுமிக்கு விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில் கன்னிமாமரி காட்சியளிக்கின்றார். இளமைத் தோற்றத்துடன் மரியா மிக அழகானவராக காணப்பட்டார் என்று குறிப்பிடுகின்றார். கையில் ஒரு செபமாலை இருந்ததையும் பார்க்கிறார். பெர்நதத்திற்கு வாழ்த்துக் கூறி தம்முடன் செபிக்க அழைக்கின்றார் கன்னிமரி.

பிப்ரவரி 25ல் மீண்டும் காட்சியளித்து மரியன்னை கூறுவார்: “அங்கே தெரிகின்ற அருவியில் போய் உன்னைக் கழுவிக் கொண்டு, நீர் பருகு”. அருவியை நோக்கி போகும் போது, அங்கு அல்ல என்று சொல்லி மரியா குகையின் தரைப் பகுதியை சுட்டிக்காட்டினார். நான் அங்கே போனேன். கை வைத்துப் பார்த்தால் தூசி படிந்த தண்ணீர் கொஞ்சம் காணப்பட்டது. குடிப்பதற்கான அளவு இல்லை. கொஞ்சம் சுரண்டிப் பார்த்தால் தண்ணீர் கொஞ்சம் கூடுதலாக வந்தது. ஆனால் மண் கலந்து இருந்தது. மூன்று முறை அதை கையினால் அள்ளி அகற்றி விட்டு அடுத்த முறை பருகினேன். அருகில் இருந்தவர்கள் ஏளனம் செய்தனர். காரணம் பருகிய வேளையில் முகமெல்லாம் மண் படிந்து இருந்தது. ஆனால் மாலைப் பொழுதுக்குள் தண்ணீர் பீரிட்டு வரத் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார். ஒரு வாரத்திற்குள் அந்த நீரூற்றினின்று இன்றுவரை ஓடிவரும் தண்ணீர் நாள்தோறும் 32000 காலன் ஆகும்.
1858 மார்ச் 25ம் நாள் மங்கள வார்த்தை திருநாள். மரியன்னை மீண்டும் அவ்விடத்தில் காட்சி தருகின்றார். இந்த முறை அந்த தாயின் பெயரைக் கேட்கிறார் சிறுமி பெர்நதத். நாமே “அமல உற்பவி” என்ற விடை கிடைக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருத்தந்தை 9ம் பத்திநாதர் “தேவ அன்னை அமல உற்பவி. பாவ மாசு எதுவுமின்றி உற்பவித்தவர்” என்பது விசுவாசப் பிரமாணம் என்று அறுதியிட்டுக் கூறியிருந்தார். கடைசியாக 18வது முறையாக கார்மேல் மலைக் கன்னியின் திருநாளன்று மரியன்னை பெர்நதத்துக்கு காட்சியளித்தார். காட்சிகளிலெல்லாம் பாவிகளுக்காக மன்றாடப் பணிக்கின்றார். செபத்துடன் தவமுயற்சிகள் இன்றியமையாதவை என்று குறிப்பிடுகின்றார். அந்த இடத்தில் பவனி வர வேண்டும், ஆலயம் எழுப்பப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். கூட்டம் கூடிவிட்ட நிலையிலும் பரவசமாகி விட்ட பெர்நதத் மட்டுமே மரியின் உருவத்தைப் பார்க்க முடிந்தது.
உலகின் அத்திசையிலிருந்தும் இன்று ஆண்டுதோறும் எண்ணற்ற திருப்பயணிகள் அங்கு செல்கின்றனர். ஆயிரக் கணக்கான புதுமைகள் நடைபெறுகின்றன. பல தரப்பட்ட கொடிய நோய்கள் நீங்குகின்றன. மருத்துவர்களால் முற்றிலும் கைவிடப்பட்டவர்களுக்கு அவர்கள் கண்முன்னே குணம் கிடைத்துள்ளது. பாவிகள் பலர் மனம் திரும்புகின்றனர் என்பது தான் சிறப்பு. : “உனக்கு நான் காட்சி கொடுத்ததினால் நீ இவ்வுலகில் துன்பம் இல்லாமல் வாழ்வாய் என்று நான் கூறமாட்டேன். மாறாக உனக்கு கலப்பில்லா மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு மறுஉலகில் தான”; என்று லூர்து அன்னை பெர்நதத்துக்கு கூறியிருந்ததுபடி அவர் பல வேதனைகளை அனுபவித்த பிறகு இறைவனடி சேர்ந்தார்.
12.02.99 “இந்து” ஆங்கில நாழிதழ் கீழ்கண்ட புதுமை சொல்லப்படுகிறது. கொடிய நோயின் பின்விளைவாக முடக்கு வாதத்தில் விடப்பட்ட ஒரு நோயாளி லூர்து நகரின் புனிதத் தலத்திற்கு கொண்டு வரப்பட்டார். 51 வயதான இவர் முற்றிலும் முடமாகி நடக்க இயலாதிருந்தவர். இங்கு புனித அருவிக்கு அருகில் கொண்டு வரப்பட்ட சில மணி நேரத்திற்குள் துணை இன்றி நடக்க ஆரம்பித்தார். இது 66வது புதுமையாக மருத்துவர்களால் ஐயந்திரிபற ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் திருச்சபை ஐயத்திற்கு இடமின்றி தெய்வச் செயல்தான் புதுமைதான் என்று புடமிட்டு சோதித்தறிந்த பின் ஏற்றுக் கொண்டது 12 ஆண்டுகளுக்கு பிறகே என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *