பிப்ரவரி:10 புனித கொலாஸ்திக்கா

பிப்ரவரி:10
புனித கொலாஸ்திக்கா
துறவினி-(கி.பி.480-547)

இத்தாலியில் செல்வந்தர்களான பெற்றோர்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக பிறந்தவர்கள் கொலாஸ்திக்காவும் அவர் சகோதரர் பெனடிக்டும். இளவயதிலிருந்தே இருவரும் பெற்றோரின் செல்வங்களை குப்பையென மதித்து வந்தனர். இச்சூழலில் பெனடிக்ட் முதலில் சுபியாக்கோவுக்கும் அங்கிருந்து மோன்டே காசினோவுக்கும் சென்ற போது பெனடிக்ட் தொடங்கிய துறவு மடத்திற்கு சற்று அப்பால் கொலஸ்திக்காவுக்கும் ஒரு மடத்தைக் கட்டி முடித்தார். இவரோடு வாழ்ந்த துறவினிகள் பெனடிக்ட் தயாரித்த துறவுவாழ்வு ஒழுங்குகளையே பின்பற்றினர்.
ஆண்டுக்கு ஒரு முறை தவக்காலம் தொடங்குமுன் இரட்டைப் பிள்ளைகள் ஆன்மீகம் பற்றிப் பேசி பரவசம் அடைய ஒன்றாக வந்து சந்திப்பது வழக்கம். அவர்களின் கடைசிசந்திப்பைப் பற்றி புனித கிரகரி அழகாக விபரிக்கின்றார். சந்திப்பு முடிந்த பின் மாலைநேரமாகி விட்டதென்று தங்கையிடம் விடைபெற முயல்கிறார் பெனடிக்ட். தமது இறுதி நேரம் அண்மையில் இருக்கிறது என்பதை உணர்ந்த கொலஸ்டிக்கா இரவு முழுவதும் தங்குங்கள் ஆசை தீர ஆன்மீக காரியங்களைப் பற்றி பேசி மகிழ்வோம் என்று அண்ணனிடம் கூறுகின்றார். அண்ணனோ இது நம் சபை ஒழுங்குக்கு எதிரானது, என்று சொல்லி தம் துறவிகளுடன் விடை பெற முயல்கின்றார்.
அண்ணனை வற்புறுத்துவதில் இனிப் பயனில்லை என்று முடிவு செய்து இறைவனிடம் மிக உருக்கமாக மன்றாடுகின்றார். உடனே இடி மின்னலுடன் கூடிய பெரு மழை பெய்யத் தொடங்கியது. பெனடிக்ட் புறப்பட முடியாத நிலையில் சகோதரியே என்ன செய்துவிட்டாய்? இறைவன் உன்னை மன்னிக்கட்டும் என்றார். நான் உங்களிடம் ஒரு விருப்பத்தை தெரிவித்தேன் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே விருப்பத்தை எல்லாம் வல்லவரிடம் சமர்ப்பித்தேன். என் மன்றாட்டும் கேட்கப்பட்டது. என்று பதில் உரைத்தார்.
மறுநாள் காலையில் பெனடிக்ட் தம் தோழர்களுடன் விடை பெற்றச் சென்றார். 3 நாள்கள் உருண்டோடின. ஆவர் தனது மடத்து ஆலயத்தில் செபித்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் தன் தங்கையின் ஆன்மா வெண்புறா வடிவில் விண்ணில் பறந்து செல்வதாக காட்சி கண்டார். இதைத் தொடர்ந்து தம் உடன் துறவிகளிடம் தம் தங்கை இறைவனடி சென்றுவிட்டார் என்று அறிவித்தார். பின்னர் தனக்கென்று தயாரித்திருந்த கல்லறையில் தங்கையை அடக்கம் பண்ணினார். இன்று பெனடிக்டைன் சபை 14 நாடுகளில் வேரூன்றியுள்ளது. இந்த இரு புனிதர்களும் தொடங்கிய துறவற சபை ஏறத்தாழ 5000 புனிதர்களை உருவாக்கித் திருச்சபைக்கு கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *