பொதுக்காலம், வாரம் 5 திங்கள்

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 1-7, 9-13

அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தலைவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார். அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய “ஏத்தானிம்” மாதத்தின் பண்டிகையின்போது, அரசர் சாலமோன் முன் கூடினர். இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தனர். குருக்கள் பேழையைத் தூக்கிக் கொண்டனர். ஆண்டவரின் பேழை, சந்திப்புக் கூடாரம், கூடாரத்தின் தூய கலன்கள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் சுமந்துசென்றனர். அரசர் சாலமோனும், அவரிடம் வந்து குழுமிய இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும், எண்ணவோ கணக்கிடவோ முடியாத அளவு திரளான ஆடுகளையும் மாடுகளையும் பேழைக்கு முன்னால் பலியிட்டனர். பின்னர், குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவில் கருவறையாகிய திருத்தூயகத்தில் அதற்குரிய இடத்தில் கெருபுகளின் இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தனர். அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன. இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை. இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய பொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை. குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. அம்மேகத் தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று. அப்பொழுது சாலமோன், “ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர். நீர் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்” என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 132: 6-7. 8-10

பல்லவி: ஆண்டவரே! உம் உறைவிடத்திற்கு வல்லமையோடு எழுந்தருளும்.

திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.
“அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கிமுன் வீழ்ந்து பணிவோம்!” பல்லவி

ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக!
உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக! உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!
நீர் திருப்பொழிவு செய்த அரசரை, உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா🙁மாற்கு 6:53-56)

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 53-56

இயேசுவும் அவருடைய சீடர்களும் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள். மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *