வருட இறுதி நன்றித் திருப்பலி.

2018.12.31

முன்னுரை.

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நாம்; மன்றாடிய நாளில் நமக்குச் செவிசாய்க்கும் இறைவனின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இன்று நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த ஆண்டவரின் சந்நிதானத்தில்  ஒன்று கூடியுள்ளோம்.

இவ்வாண்டு முழுவதும் நன்மைகளால் நம்மை நிரப்பி நம்மைக் காத்து வந்த இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.  இந்த நன்றியின் வெளிப்பாடு  பவுலடியார் கூறுவதுபோல: கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல் களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.என்னும் வார்த்தைகளைப் போன்று அமைய வேண்டும்.

எனவே இந்த நன்றியின் நாளிலே, எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம் என்னும் உறுதியோடு இத் திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம். .

முதல் வாசகம்

கிறிஸ்து வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 3:12-17

சகோதரர் சகோதரிகளே ,

நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.

இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள். கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.

எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்       திபா: 138:1-5

பல்லவி:  உம் பேரன்பை முன்னிட்டு உமக்கு நன்றி செலுத்துவேன்!

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்:

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.

ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்: ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   லூக்.1:49

அல்லேலூயா, அல்லேலூயா ! வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.  தூயவர் என்பதே அவரது பெயர்; . அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

அவ்வேளையில்

இயேசு, ; தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.  ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.  தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்: மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ; என்று கூறினார்.

மேலும் அவர், ; பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.  அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது ; என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் தங்களை அணி செய்து கொண்டு, எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்தி வாழும் மனப் பக்குவத்தை.அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  2. அரும் பெரும் செயல்களால் எம்மை மகிழ்விக்கும் தந்தையே இறைவா! நாங்களஇ ஒவ்வொருவரும் நன்றியுள்ளவர்களாயிருந்து, கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை எங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்ளவைத்த! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறி, ;. திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் உம்மைப் போற்றிப் புகழும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  3. வல்லவரான தந்தையே இறைவா! பிறக்கவிருக்கும் புதிய ஆண்டை அமைதியும், மகிழ்வும், பாதுகாப்பும், அருளும் நிறைந்த ஓர் ஆண்டாக எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம். 
  4. என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! பிரிவினைகளோடும், கசப்புணர்வுக ளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், கண்ணீரோடும் வாழும் அனைத்து குடும்பங்கள் மீதும் மன மிரங்கி அவர்கள் உண்மையான மனமாற்றம் பெற்று, கணவன், மனைவி ஆகியோர் ஒப்புரவாகி ஆதிக் கிறீஸ்தவ வாழ்வை வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்    Thanks Giving 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *