வருடப் பிறப்பு – இறைவனின் அன்னை தூய கன்னி மரியா பெருவிழா.

2019.01.01

முன்னுரை.

ண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நமக்கு ஆசி வழங்கி நம்மைக் காக்கும் நம் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். மூவொரு இறைவா நன்றி இயேசுவே ஆண்டவர், மரியே வாழ்க என்னும் வாழ்த்தொலிகளோடு இப் புதிய ஆண்டை வரவேற்க இறைவனின் திருச் சந்தியில் பெருமகிழ்ச்சியுடன் ஒன்று கூடியுள்ளோம்.

நாம் கடவுளின் பிள்ளைகளாகவும், உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருப்பதே நம் இறைத் தந்தையின் விருப்பமாகும் என்னும் நற்செய்தி  இப் புதிய ஆண்டிலே நமக்குக் கிடைக்கும் உயரிய நற்பேறாகின்றது. எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்ட இறைவார்த்தைப் பகுதி வழியாக ஆண்டவரின் ஆசீர் நம் ஒவ்வொருவருக்கும் அருளப்படுகின்றது. ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள்மேல் ஒளிரச்செய்து உங்கள்; மீது அருள் பொழிவாராக: என்னும் இறைவார்த்தைகள் இந்தப் புதிய ஆண்டில் ஆண்டவர் நமக்குக் கொடுக்க இருக்கும் ஆசீரையும், பாதுகாப்பையும், உடல், உள நலத்தையும் உறுதி செய்கின்றன.

எனவே நாமும் இடையர்களைப்போல இதுவரை நம் ஒவ்வொருவரையும் தம் கண்ணின் மணிபோல காத்து வழிநடத்தி வந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இது வரை வழிநடாத்திய இறைவன் தொடர்ந்தும் வழிநடாத்துவார் என்னும் உறுதியான விசுவாசத்தோடு: நம்மை எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும், தீமைகளிலிருந்தும், சோதனைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் எப்போதும் பாதுகாத்து, தொடர்ந்து வழி நடத்தும் படியாய் இத் திருப்பலியில் மன்றாடுவோம்.

அன்னை மரியாளை இறைவனின் தாய்,அமைதியின் அரசி  எனப் பெருமைப்படுத்தி விழாக் கொண்டாடும் இந்நாளில், அன்னையின் பரிந்துரையும், அரவணைப்பும், எப்பொழுதும், நம்மோடும், நம் குடும்பங்களோடும் இருக்க அருள்வேண்டி இத் திருப் பலியில் சிறப்பாக மன்றாடுவோம். அத்தோடு நமக்குத் தேவையான அமைதியையும், மகிழ்வையும் இறைவன் நிறைவாக அருள இத் திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம்

இஸ்ராயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்:

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம். 6:22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: ;ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! ; இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 67: 1-2, 4-5,7

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்: பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்.

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்: உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்க ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!

 

இரண்டாம் வாசகம்.

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்:

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய  திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி  ;அப்பா, தந்தையே ;, எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே..

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி. 2:13-14 

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும்; கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

அக்காலத்தில்

இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்;கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப்  போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. ஆசீர் வழங்கி எம்மைக் காக்கும் அன்புத் தெய்வமே எம் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்காகவும், உமக்கு நன்றி கூறுகின்றோம். உம் பணி செய்யத் தேர்ந்து கொள்ளப்பட்டிருக்கும் இவர்கள், நல்ல உடல், உள சுகத்தோடு வாழவும், ஞானத்தையும், அறிவையும் தொடர்ந்து இவர்கள் உம்மிடமிருந்து கொடையாகப் பெற்றுச் சிறந்த சாட்சிகளாக வாழவும், உமக்குகந்த பாதையில் மக்களை நடாத்திச் செல்லவும்  தேவையான அருள் வரங்களை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. எல்லா நிகழ்வுகளையும் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்த மரியாளை, கிறிஸ்தவ வாழ்வுக்கு சிறந்த மாதிரிகையாகவும், எமக்குத் தாயாகவும்; கொடுத்திருக்கும் இறைவா! அன்னையவளுக்கு விழா எடுக்கின்ற இந்த நன் நாளில், மரியன்னை வழியாய் எங்களை நிறைவாய் ஆசீர்வதியும். மரியாளைப் போன்று நாங்கள் தூயவர்களாய் வாழவும், விசுவாசத்தில் நிலைத்திருக்கவும், மானிட விடுதலைக்காய் எங்களையே முழுமையாக அர்ப்பணிக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. கண்ணின் மணிபோல ஒவ்வொரு நொடிப்பொழுதும் எங்களையே காத்து வழி நடத்தும் இறைவா! கடந்த ஆண்டில் நீர் எமக்குச் செய்து அனைத்து நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். எம் வாழ்வில் இன்னுமொரு ஆண்டைக் கொடையாகப் பெற்று மகிழும் நாங்கள், நற்செய்தியில் காணும் இடையாகளைப் போன்று, வாழ்வில் நாங்கள் கண்ட உம் மகத்துவமிக்க செயல்கள் அனைத்திற்காகவும் உம்மை எந்நாளும் போற்றிப் புகழவும்: நீர் எமக்குத் தரும் அருளையும், ஆசீர்வாதங்களையும் எல்லோரோடும் சிறப்பாக ஏழை எளியவர்களோடு பகிர்ந்து வாழ்வதன் வழி இறையரசை இவ்வுலகில் காணத் தேவையான அருளைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இனி நீங்கள் அடிமைகள் அல்ல, மாறாக இறைவனின் பிள்ளைகள், உரிமைப்பேறு உடையவர்கள்: என்று பவுல் அடிகளார் வழியாகக் கூறும் இறைவா! விடுதலை, சமத்துவம், நீதி, உண்மை நிறைந்த சமுதாயம் படைக்க, நாள்தோறும் போராடும் உம் மக்களைக் கண்ணோக்கும். சிறப்பாக வேதனைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மக்களை ஆசீர்வதித்து, சக்தி தந்து, விடுதலை தந்து, எம் சொந்த மண்ணில் எங்களை அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. எம் திருமுகத்தை உம் பக்கம் திருப்பி உங்களுக்க அமைதி அருள்வேன் என்று உம் அடியான் மோசே வழியாக எமக்கு கூறும் தந்தையே இறைவா! மேசேயைப் போன்று தன்னலமற்ற நீதியையும், உண்மையையும் விரும்புகின்ற, மக்கள் மீது அன்பும், அக்கறையும் உள்ள நல்லவர்களை, நல்ல தலைவர்களைத் தாரும். பிரிவினைகள், பிளவுகள், ஏற்றத் தாழ்வுகள், கலவரங்கள், போர் போன்றவை அறவே ஒழித்து, உண்மையான அமைதியும், விடுதலை வாழ்வையும் பெற்றுத் தரும் கருவிகளாகச் அவர்கள் செயற்பட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்     New Year 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *