வருடப் பிறப்பு – இறைவனின் அன்னை தூய கன்னி மரியா பெருவிழா.

2019.01.01

முன்னுரை.

ண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நமக்கு ஆசி வழங்கி நம்மைக் காக்கும் நம் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். மூவொரு இறைவா நன்றி இயேசுவே ஆண்டவர், மரியே வாழ்க என்னும் வாழ்த்தொலிகளோடு இப் புதிய ஆண்டை வரவேற்க இறைவனின் திருச் சந்தியில் பெருமகிழ்ச்சியுடன் ஒன்று கூடியுள்ளோம்.

நாம் கடவுளின் பிள்ளைகளாகவும், உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருப்பதே நம் இறைத் தந்தையின் விருப்பமாகும் என்னும் நற்செய்தி  இப் புதிய ஆண்டிலே நமக்குக் கிடைக்கும் உயரிய நற்பேறாகின்றது. எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்ட இறைவார்த்தைப் பகுதி வழியாக ஆண்டவரின் ஆசீர் நம் ஒவ்வொருவருக்கும் அருளப்படுகின்றது. ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள்மேல் ஒளிரச்செய்து உங்கள்; மீது அருள் பொழிவாராக: என்னும் இறைவார்த்தைகள் இந்தப் புதிய ஆண்டில் ஆண்டவர் நமக்குக் கொடுக்க இருக்கும் ஆசீரையும், பாதுகாப்பையும், உடல், உள நலத்தையும் உறுதி செய்கின்றன.

எனவே நாமும் இடையர்களைப்போல இதுவரை நம் ஒவ்வொருவரையும் தம் கண்ணின் மணிபோல காத்து வழிநடத்தி வந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இது வரை வழிநடாத்திய இறைவன் தொடர்ந்தும் வழிநடாத்துவார் என்னும் உறுதியான விசுவாசத்தோடு: நம்மை எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும், தீமைகளிலிருந்தும், சோதனைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் எப்போதும் பாதுகாத்து, தொடர்ந்து வழி நடத்தும் படியாய் இத் திருப்பலியில் மன்றாடுவோம்.

அன்னை மரியாளை இறைவனின் தாய்,அமைதியின் அரசி  எனப் பெருமைப்படுத்தி விழாக் கொண்டாடும் இந்நாளில், அன்னையின் பரிந்துரையும், அரவணைப்பும், எப்பொழுதும், நம்மோடும், நம் குடும்பங்களோடும் இருக்க அருள்வேண்டி இத் திருப் பலியில் சிறப்பாக மன்றாடுவோம். அத்தோடு நமக்குத் தேவையான அமைதியையும், மகிழ்வையும் இறைவன் நிறைவாக அருள இத் திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம்

இஸ்ராயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்:

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம். 6:22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: ;ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! ; இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 67: 1-2, 4-5,7

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்: பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்.

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்: உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்க ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!

 

இரண்டாம் வாசகம்.

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்:

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய  திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி  ;அப்பா, தந்தையே ;, எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே..

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி. 2:13-14 

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும்; கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

அக்காலத்தில்

இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்;கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப்  போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. ஆசீர் வழங்கி எம்மைக் காக்கும் அன்புத் தெய்வமே எம் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்காகவும், உமக்கு நன்றி கூறுகின்றோம். உம் பணி செய்யத் தேர்ந்து கொள்ளப்பட்டிருக்கும் இவர்கள், நல்ல உடல், உள சுகத்தோடு வாழவும், ஞானத்தையும், அறிவையும் தொடர்ந்து இவர்கள் உம்மிடமிருந்து கொடையாகப் பெற்றுச் சிறந்த சாட்சிகளாக வாழவும், உமக்குகந்த பாதையில் மக்களை நடாத்திச் செல்லவும்  தேவையான அருள் வரங்களை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. எல்லா நிகழ்வுகளையும் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்த மரியாளை, கிறிஸ்தவ வாழ்வுக்கு சிறந்த மாதிரிகையாகவும், எமக்குத் தாயாகவும்; கொடுத்திருக்கும் இறைவா! அன்னையவளுக்கு விழா எடுக்கின்ற இந்த நன் நாளில், மரியன்னை வழியாய் எங்களை நிறைவாய் ஆசீர்வதியும். மரியாளைப் போன்று நாங்கள் தூயவர்களாய் வாழவும், விசுவாசத்தில் நிலைத்திருக்கவும், மானிட விடுதலைக்காய் எங்களையே முழுமையாக அர்ப்பணிக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. கண்ணின் மணிபோல ஒவ்வொரு நொடிப்பொழுதும் எங்களையே காத்து வழி நடத்தும் இறைவா! கடந்த ஆண்டில் நீர் எமக்குச் செய்து அனைத்து நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். எம் வாழ்வில் இன்னுமொரு ஆண்டைக் கொடையாகப் பெற்று மகிழும் நாங்கள், நற்செய்தியில் காணும் இடையாகளைப் போன்று, வாழ்வில் நாங்கள் கண்ட உம் மகத்துவமிக்க செயல்கள் அனைத்திற்காகவும் உம்மை எந்நாளும் போற்றிப் புகழவும்: நீர் எமக்குத் தரும் அருளையும், ஆசீர்வாதங்களையும் எல்லோரோடும் சிறப்பாக ஏழை எளியவர்களோடு பகிர்ந்து வாழ்வதன் வழி இறையரசை இவ்வுலகில் காணத் தேவையான அருளைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இனி நீங்கள் அடிமைகள் அல்ல, மாறாக இறைவனின் பிள்ளைகள், உரிமைப்பேறு உடையவர்கள்: என்று பவுல் அடிகளார் வழியாகக் கூறும் இறைவா! விடுதலை, சமத்துவம், நீதி, உண்மை நிறைந்த சமுதாயம் படைக்க, நாள்தோறும் போராடும் உம் மக்களைக் கண்ணோக்கும். சிறப்பாக வேதனைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மக்களை ஆசீர்வதித்து, சக்தி தந்து, விடுதலை தந்து, எம் சொந்த மண்ணில் எங்களை அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. எம் திருமுகத்தை உம் பக்கம் திருப்பி உங்களுக்க அமைதி அருள்வேன் என்று உம் அடியான் மோசே வழியாக எமக்கு கூறும் தந்தையே இறைவா! மேசேயைப் போன்று தன்னலமற்ற நீதியையும், உண்மையையும் விரும்புகின்ற, மக்கள் மீது அன்பும், அக்கறையும் உள்ள நல்லவர்களை, நல்ல தலைவர்களைத் தாரும். பிரிவினைகள், பிளவுகள், ஏற்றத் தாழ்வுகள், கலவரங்கள், போர் போன்றவை அறவே ஒழித்து, உண்மையான அமைதியும், விடுதலை வாழ்வையும் பெற்றுத் தரும் கருவிகளாகச் அவர்கள் செயற்பட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்     New Year 2013

வருட இறுதி நன்றித் திருப்பலி.

2018.12.31

முன்னுரை.

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நாம்; மன்றாடிய நாளில் நமக்குச் செவிசாய்க்கும் இறைவனின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இன்று நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த ஆண்டவரின் சந்நிதானத்தில்  ஒன்று கூடியுள்ளோம்.

இவ்வாண்டு முழுவதும் நன்மைகளால் நம்மை நிரப்பி நம்மைக் காத்து வந்த இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.  இந்த நன்றியின் வெளிப்பாடு  பவுலடியார் கூறுவதுபோல: கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல் களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.என்னும் வார்த்தைகளைப் போன்று அமைய வேண்டும்.

எனவே இந்த நன்றியின் நாளிலே, எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம் என்னும் உறுதியோடு இத் திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம். .

முதல் வாசகம்

கிறிஸ்து வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 3:12-17

சகோதரர் சகோதரிகளே ,

நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.

இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள். கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.

எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்       திபா: 138:1-5

பல்லவி:  உம் பேரன்பை முன்னிட்டு உமக்கு நன்றி செலுத்துவேன்!

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்:

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.

ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்: ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   லூக்.1:49

அல்லேலூயா, அல்லேலூயா ! வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.  தூயவர் என்பதே அவரது பெயர்; . அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

அவ்வேளையில்

இயேசு, ; தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.  ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.  தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்: மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ; என்று கூறினார்.

மேலும் அவர், ; பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.  அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது ; என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் தங்களை அணி செய்து கொண்டு, எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்தி வாழும் மனப் பக்குவத்தை.அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  2. அரும் பெரும் செயல்களால் எம்மை மகிழ்விக்கும் தந்தையே இறைவா! நாங்களஇ ஒவ்வொருவரும் நன்றியுள்ளவர்களாயிருந்து, கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை எங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்ளவைத்த! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறி, ;. திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் உம்மைப் போற்றிப் புகழும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  3. வல்லவரான தந்தையே இறைவா! பிறக்கவிருக்கும் புதிய ஆண்டை அமைதியும், மகிழ்வும், பாதுகாப்பும், அருளும் நிறைந்த ஓர் ஆண்டாக எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம். 
  4. என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! பிரிவினைகளோடும், கசப்புணர்வுக ளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், கண்ணீரோடும் வாழும் அனைத்து குடும்பங்கள் மீதும் மன மிரங்கி அவர்கள் உண்மையான மனமாற்றம் பெற்று, கணவன், மனைவி ஆகியோர் ஒப்புரவாகி ஆதிக் கிறீஸ்தவ வாழ்வை வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்    Thanks Giving 2018

திருக்குடும்பத் திருவிழா.

2018.12.30

முன்னுரை.

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது: என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம்மிடம் மிகுந்த அன்பு கொண்டுள்ள தந்தையாம் இறைவனின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இன்று நாம் திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். நம்மை அழைத்து, அர்ச்சித்து குடும்பமாக ஒன்றிணைக்கும் நம் ஆண்டவரின் சந்நிதானத்தில்  ஒன்று கூடியுள்ளோம்.

குடும்பம் : இறைவனின் மாபெரும் கொடை, இறையன்பின் இனிய வெளிப்பாடு, இறைவனோடு இணைந்து பணியாற்ற நமக்குக் கொடுக்கப்படும் ஓர் அழைப்பு.உண்மையான செப வாழ்வும், இறைவனின் வார்த்தைகளை வாழ்வாக்குவதுமே குடும்ப வாழ்வை மகிழ்ச்சியுள்ளதாக்கும். அன்பு, பொறுமை, மன்னிப்பு, தூய வாழ்வு, புரிந்துணர்வு என்பவையே குடும்ப வாழ்வுக்கு உறுதியூட்டுபவையாகும். இவையே இன்றைய இறைவர்த்தைகள் ஊடாக நாம் பெற்றுக்கொள்ளும் இறைச் செய்தியாகும்.

எனவே நாம் நம்முடைய குடும்ப வாழ்வைச் சீர்தூக்கிப்பார்த்து, இறைவனுக்குகந்த குடும்பங்களாய் வாழவும், பிரிந்திருக்கும் குடும்பங்கள் ஒன்று சேரவும், குடும்பங்களுள் அமைதி நிலவவும் அருள் வேண்டிச ;செபிப்பதோடு, இன்று தங்கள் சபையின் திருவிழாவைக் கொண்டாடும் திருக்குடும்பச் சபை அருட்சகோதரிகளுக்காகவும் மன்றாடுவோம்.

முதல் வாசகம்

அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.

சாமுவேல் முதல்  நூலிலிருந்து வாசகம். 1:20-22,24-28

உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுத்தார், நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன் என்று சொல்லி, அவர் அவனுக்குச் சாமுவேல்; என்று பெயரிட்டார்.

எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனைiயும் செலுத்தச் சென்றார்கள், ஆனால், அன்னா செல்லவில்லை, அவர் தம் கணவரிடம், பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்து;ச செல்வேன், அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான் ; என்று சொன்னார்.

அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார், அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான், அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள், பின் அவர் கூறியது: ;என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன், நான் ஆண்டவரிடம் வி;ண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார், ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன், அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன், அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்,

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்       திபா: 84:1-2,4-5,8-9

பல்லவி:  ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறு பெற்றோர்!

படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது: என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.பல்லவி

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்: அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்: அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.பல்லவி

படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே! எனக்குச் செவிசாய்த்தருளும்!  எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்!பல்லவி

இரண்டாம் வாசகம்.

நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். 

யோவான் எழுதிய முதல்  திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-2, 21-24

அன்பார்ந்தவர்களே,

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்: ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்: ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்: அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணை;ந்திருக்கிறார்: கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   திப.16:14

அல்லேலூயா, அல்லேலூயா ! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவர், எங்கள் இதயத்தைத் திறந்தருளும் . அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

போதகர்கள் நடுவில் அமர்ந்திருந்த இயேசுவை அவருடைய பெற்றோர் கண்டு கொள்கின்றர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:41-52

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்: இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார்.  இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது: பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.  ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்: அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள்.  அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.  அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ;மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே ; என்றார். அவர் அவர்களிடம் ;நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? ; என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்.  அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் கிறிஸ்து அருளும் அமைதி அவர்கள் உள்ளங்களை நெறிப்படுத்தி! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அவர்களுக்குள் நிறைவாகக் குடிகொண்டு, அவர்கள் சிறப்பான நற்செய்தியின் தூதுவர்களாய் வாழ வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அருள் வளங்களின் ஊற்றே இறைவா! குடும்பங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாங்கள் ஒவ்வொரு வரும் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் எங் களை அணிசெய்து;. ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டு. ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் நீர் எங்களை மன்னித்தது போல நாங்களும் மன்னித்து நற்செயல்களில் ஆர்வமுள்ள உமக்குரிய தூய குடும்பங்களாக வாழவு வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அன்புத் தந்தையே இறைவா! நீர் எமக்களித்த பெற்றோருக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். நாங்கள் எங்கள் பெற்றோரை மதித்து, அவர்களைப் புண்படுத்தாது, அவர்களை மேன்மைப்படுத்தி வாழ வேண்டிய அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.
  4.  என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், கண்ணீரோடும் வாழும் அனைத்து குடும்பங்கள் மீதும் மன மிரங்கி அவர்கள் உண்மையான மனமாற்றம் பெற்று, கணவன், மனைவி ஆகியோர் ஒப்புரவாகி ஆதிக் கிறீஸ்தவ வாழ்வை வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்     Holyfamilyfeast