முதல் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்


தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்?

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28

 ஆண்டவர் கூறுவது: தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார்.

அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்பட மாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத்தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானது எதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும் செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர்.

ஆயினும், `தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக்கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்: திபா 130: 1-2. 3-4. 5-6யஉ. 7-8

பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

 

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6யஉ விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி

இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.


நற்செய்தி வாசகம்

 

நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

 

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்:

“கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்” என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; `அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *