பிப்ரவரி:23 புனித பொலிக்கார்ப்

பிப்ரவரி:23

புனித பொலிக்கார்ப்
ஆயர், மறைசாட்சி-(கி.பி.156)

இப் புனிதர் “அப்போஸ்தலிக்க தந்தையர்கள்” என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற குழுவைச் சார்ந்தவர். நற்செய்தியாளர் புனித யோவானின் சீடர். போலிக்கார்ப்பிடம் மறைக்கல்வி கற்று தேர்ந்தவர்கள். புனித இரனேயுசும், பாப்பியாசும் ஆவார். அந்தியோக்கியா நகர் ஆயர் புனித இஞ்ஞாசியார் கொலைக் களத்திற்கு சங்கிலி போட்டு இழுத்துச் செல்லப்பட்ட போது ஸ்மிர்னா நகரில் போலிக்கார்ப் அவரைச் சந்தித்து அவர் கட்டப்பட்டிருந்த சங்கிலியை வணக்கத்துடன் முத்தமிட்டார். “அந்தியோக்கியா நகர் திருச்சபையை கவனித்துக் கொள்ளும்” என்று இவரை உருக்கமாக கேட்டுக் கொண்டார் இஞ்ஞாசியார்.
கொடுங்கோலன் மார்க்கஸ் ஆலியுஸ் ஆட்சியின் 6ம் ஆண்டில் பெரும் வேத கலாபனை தோன்றியது. பலரும் துணிச்சலுடன் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டார்கள். போலிக்கார்ப்பை விசுவாசிகள் ஒளிந்து கொள்ளும்படி கேட்டனர். அவ்வாறு மறைந்த நேரம் ஒருவன் அவரை காட்டிக் கொடுத்தான். அவரை கைதியாக்க வந்த கும்பலைப் பார்த்து சற்றுநேரம் செபித்து விட்டு வர இசைவு கேட்டார். இவர்களுக்கு இரவு உணவளித்தார்.
பின்னர் ஆர்ப்பரிப்புடன் கிளம்பினார். “கிறிஸ்துவை மறதலித்தால் உனக்கு விடுதலை” என்று முழங்கினான் மன்னன். “86 ஆண்டுகளாக அவருக்கு ஊழியம் புரிந்து வருகிறேன். அவர் எனக்கு எவ்வித தீங்கும் இழைக்கவில்லை. இத்தகையவரை நான் பழித்துரைப்பேனா? நான் ஒரு கிறிஸ்தவன்” என்று அச்சமின்றி பதிலுரைத்தார். இவ்வாறு விடையளித்த போது அவரது முகம் தெய்வீக ஒளியுடன் காணப்பட்டது. “இவன் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்று ஆணை பிறக்கவே, எதிர்ப்பாளர்கள் வெறியுடன் அங்குமிங்கும் ஓடி விறகுக் கட்டைகளை கொண்டு வந்து சேர்த்தனர். “நான் அஞ்சி அழுது ஓடமாட்டேன். எனவே என்னைக் கட்ட வேண்டாம். எனக்கு உறுதியூட்டும் தெய்வம் நான் அசைவுறாதிருக்க வரமருள்வார்” என்றார். எனவே கைகளை மட்டும் முதுகுப் புறம் கட்டினார்கள். நெருப்பு மூட்டப்பட்டது. ஆனால் அவ்வேளையில் ஒரு புதுமையும் நிகழ்ந்தது. விறகுக் கட்டைகள் விரைவாக பற்றி எரிந்தாலும் நான்கு சுவர்கள் எழும்பி அவரைப் பாதுகாப்பது போல் தோன்றியது! அவரது தசை எரியும் போது தீயநாற்றத்திற்குப் பதில், நறுமணப் புகை வந்து கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கொடுங்கோலன் அவரை ஈட்டியால் குத்தி கொல்ல கட்டளையிட்டான். அப்போது அவர்மீது ஒரு புறா பறந்து வந்தது. நெருப்பை அணைக்க போதுமான இரத்தம் மேலிருந்து புறப்பட்டு வந்தது. வெறித்தனம் நீங்காத சூழலில் அவரது உடலை அரக்கன் எரித்துச் சாம்பலாக்கினான். இந் நிகழ்ச்சி கி.பி155ல் இதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு நடந்ததாக வரலாறு கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *