திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புள்ள சகோதர சகோதரிகளே!

ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் வந்துள்ள, நம் ஆண்டவர் இயேசுவின் திருப் பெயரில் வாழ்த்துக்கள் கூறி திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடும், பெரு மகிழ்வோடும் வரவேற்கின்றோம்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதும்;. இடைவிடாது இறைவனிடம் வேண்டுதல் செய்வதும். எல்லாச் சூழ்நிலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறுவதும், தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்காதிருப்பதும். இறைவாக்குகளைப் புறக்கணிக்காமல் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொண்டு. எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகி வாழ்வதுமே நமது கிறிஸ்தவ ஆன்மிக வாழ்வின் முழுமைக்கான வழிகளாக இருக்கின்றன என்பதை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

எனவே அமைதி அருளுகின்றவரும், நம்மை முற்றிலும்; தூய்மையாக்குபவரும்,  நம்முடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காக்கின்றவரும், நம்பிக்கைக்குரியவருமான நம் கடவுளிடம் சரணடைந்து அவர் பின்னே செல்லுவோம், அமைதியையும், மகிழ்ச்சியையும் பெறுவோம். அதற்காக இத்திருப்பலியில் நம்மை அர்பணித்துச் செபிப்போம்.

 

முதல் வாசகம்

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-2a, 10-11

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் என்னை அனுப்பியுள்ளார்.

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்   லூக் 1: 47-48. 49-50. 53-54

பல்லவி: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.

ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். பல்லவி

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். –  பல்லவி

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது கடவுள் உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத் தையும் காப்பாராக!

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-24

சகோதரர் சகோதரிகளே,

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.

தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமை களையும் விட்டு விலகுங்கள்.

அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக் குரியவர். அவர் இதைச் செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : எசா 61: 1

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோ ருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8, 19-28

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனை வரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர் களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, “அப்படி யானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார். “நீர் தாம் வரவேண்டிய இறை வாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறு மொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “‘ஆண்டவருக்காக வழியைச் செம்மை யாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே” என்றார்.

பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக் கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக் கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களி டையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரை யிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நம்பிக்கையாளர் மன்றாட்டு.

1.உம் பணியாளருக்குத் துணையாக இருந்து வருகிற எங்கள் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும்  நிறைவாக ஆசிர்வதித்து வலுப் படுத்தும். அவர்கள் ஒவ்வொருவரும:; தாம் ஒடுக்கப் பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோ ருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோ ருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் உம்மால் அழைக்கப்பட்டுள் ளோம், அனுப்பப்பட்டுள்ளோம் என்னும் உண்மையை உணர்ந்து பணியாற்ற வேண்டிய ஞானத்தை அவர் களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகின்ற தந்தையே இறைவா!

இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும்: தூய ஆவியின் செயல் பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். என்னும் இறைவனின் குரலுக்கு நல்லுள்ளத்தோடு செவிமடுத்து, நாங்கள் ஒவ்வொருவரும் இறை மகிமைக்காவும், பிறர் நலனுக்காகவும் உழைக்கின்ற மக்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் காப்பாற் றுகின்றவரான தந்தையே இறைவா!

அலகையின் தந்திர வலையில் சிக்கிப் போதைப் பொருள் பாவனையினாலும், கலாச்சாரச் சீர்கேடுகளி னாலும், ஒழுக்க வாழ்விற்கு மாறான செயற்படுகளி னாலும், தவறான இலத்திரனியல் பொருட்களின் பாவனையினாலும் சிதைவடைந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து, இந்தத் தீமையின் பிடியிலிருநது அவர்களை விடுவித்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. நேர்மையும் விடுதலையும் துளிர்த்தெழச் செய்கின்றவரான தந்தையே இறைவா!

உலக நாடுகள் முழுவதிலும் விதைக்கப்பட்டுள்ள அநீதி. சுயநலம், பேரின்மீது பெருவிருப்பம், அடக்குமுறை போன்ற தீமைகளை வேரறுத்து அமைதி, விடுதலை, பிறர்நலம், உண்மை  என்னும் விதைகளை விதைத்திட வேண்டுமென்றும், தற்போதைய காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அத்தனை தாக்கங்களிலிருந்தும் அனைத்து மக்களையும் பாதுகாத்திட் வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3rd Week of Advent 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *