திருச்சிலுவையின் மகிமை விழா.

திருச்சிலுவையின் மகிமை விழா.

மன்னார் மறைமாவட்டத்தில்;, மன்னார் நகரின் வடக்குப் பக்கமாக கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள விசுவாசச் சிறப்புமிக்க குருசுக் கோயில் என அழைக்கப்படும் திருச்சிலுவை ஆலய விழா நேற்றைய தினம் (14.09.2017) வியாழக்கிழமை ஆன்மிகச் செழுமையோடு கொண்டாடப்பட்டது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றி, மக்களின் சிறப்புக் கருத்துக்களுக்காகச் செபித்தார். மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கு மக்களும், பள்ளிமுனை தூய லூசியா ஆலயப் பங்கு மக்களும் இணைந்து இத்திருவிழாத் திருப்பலிக்கான ஆன்மிகப் பணிகளை முன்னெடுத்துச் சென்றனர். இந்த இரண்டு ஆலயத்திற்குப் பொறுப்பான அருட்பணியாளர்களும் இணைந்து அனைத்துப் பணிகளையும் செய்தனர். பல இறைமக்கள் இத் திருவிழாத் திருப்பலியில் பங்கேற்று இறைவனுக்கு நன்றி செலுத்தியதோடு அருள் நலன்களையும் பெற்றுச் சென்றனர்.

இந்தத் திருத்தலம் ஆன்மிக வளம் கொழிப்பதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பதாக இந்தியாவிலிருந்து இலங்கையிலுள்ள கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மிகப் பணியாற்ற வந்த இந்தியாவின் புனிதரான தூய பிரான்சிஸ் சவேரியாரின் பதிலாளான அருட்பணி பிரான்சிஸ் சவேரியார் அடிகளார் மன்னாருக்கு கடல் வழியாக வந்து தற்போது குருசுக் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தரையிறங்கினார். அவ்வேளையில் அவர் வைத்திருந்த திருச்சிலுவை கடலில் விழுந்து காணமற் போய்விட்டது. பின்னர் கடல் நண்டு ஒன்று அந்தத் திருச் சிலுவையைக் கொண்டு வந்து அருட்பணி பிரான்சிஸ் சவேரியாரிடம் கொடுத்ததாக வரலாற்றப் பதிவுகள் குறியிட்டுக் காட்டுகின்றன. அடுத்து இலங்கையின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் தூய யோசவ் வாஸ் அடிகளாரும் இவ்வழியாகவே கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மிகப் பணி செய்ய பூநகரி நோக்கிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இத் திருவிழாவிற்கான வரலாற்றுப் பின்னணி.

கிபி 325ம் ஆண்டு  கொன்ஸ்டன்டின் மன்னனின் தாயார் தூய ஹெலனா என்பவர் எருசலேம் நகருக்குப் புனித பயணம் மேற்க்கொண்டார். அவர் கல்வாரி மலைக்குச் சென்று, அகழ்வாராட்சியில் ஈடுபட்டபோது, அங்கே மூன்று சிலுவைகள் இருப்பதைக் கண்டார். இந்த மூன்று சிலுவைகளில் எது இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே, அவர் ஒரு கை சூம்பிய மனிதனை அழைத்து, அந்த மூன்று சிலுவைகளையும் தொடுமாறு சொன்னார். உடனே அம்மனிதன் மூன்று சிலுவைகளையும் தொட்டபோது, அதிலிருந்த ஒரு சிலுவையிலிருந்து ஆற்றல் வெளிப்பட அம்மனிதருடைய கை குணமடைந்தது. இதைப் பார்த்த தூய ஹெலனா அந்த திருச்சிலுவையை உரோமை நகருக்குத் தூக்கிகொண்டு வந்து, ஆலயம் ஒன்றைக் கட்டி எழுப்பி, அதில் திருச்சிலுவை வைத்தார். அவர் திருச்சிலுவையை உரோமையில் உள்ள ஆலயத்தில் நிறுவிய நாள் 326 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் நாள். அன்றிலிருந்து திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *