ஆண்டவருடைய திருப்பாடுகள்.குருத்து ஞாயிறு.14.04.2019

 

குருத்தோலைப் பவனி.

முன்னுரை:

“கிறிஸ்துவே அரசரென்று, ‘ஓசான்னா’ பாடி இயேசுவை வரவேற்போம்”.

இறை இயேசுவில் அன்பு நிறை சகோதர சகோதரிகளே,!

புனித வாரத்தின் தொடக்க நாளாகிய குருத்து ஞாயிறு தினம் இன்றாகும். கிறஸ்துவின் வெற்றிக்கு கட்டியம் கூறும் புனித வாரத்தினுள் இன்று நாங்கள் நுழைகின்றோம்.

மானிட மீட்புக்கான இயேசுவின் பாடுகள், மரணத்தோடு இணைந்து , தியானித்து, “ஆண்டவரே, என்னைவிட்டு, தொலையில் போய் விடாதேயும். எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும் எனும் மனமாற்ற விருப்போடு, இஞ்ஞாயிறு திருப்பலியில் பங்கெடுக்கும் அனைவரையும், இயேசுக் கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்போடு வரவேற்றழைக்கின்றோம்.

திருநீற்றுப் புதனுடன் தவக்காலத்தைத் தொடங்கிய நாம் செப, தப, ஒறுத்தல், அயலவர் உறவுத் தயாரிப்போடு எமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து பாவ பலவீனங்களைக் களைந்து: சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்ட இயேசுவைப் பின்பற்றி புதுவாழ்வு வாழத் தூண்டுதல் பெற முயன்றுள்ளோம்.

இன்றைய திருவழிபாட்டில் இயேசு தம் சீடரோடு பாஸ்கா விழா கொண்டாட ஜெருசலேம் நகருக்குள் நுழைய, வீதிகளில் நின்ற மக்கள் கூட்டம் கிறிஸ்துவே அரசரென்று ஒலிவக் கிளைகளை உயர்த்திப்பிடித்து ‘ஓசான்னா’ என்று ஆரவாரத்தோடு ஆர்ப்பரித்துப் பாடி மகிழ்வுடன் இயேசுவை வரவேற்றார்கள்.

இவ்வரலாற்று நிகழ்வை நாமும் இன்று நினைவு கூர்ந்து, இயேசுக்கிறி;ஸ்துவை அரசர், மீட்பர், துன்புறும் ஊழியர் என்னும் உணர்வோடு அவரை ஏற்று, இப்பவனியில் பங்கெடுப்போம். குருத்தோலை குறித்துக் காட்டும் வெற்றியின் அடையாளமாக இப்புனித வாரம் முழுவதும் இயேசுவின் பாடுகள் மரணத்தோடு ஒன்றித்து மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழவும் , அன்பு, தாழ்ச்சி, சகோதரத்துவம் என்னும் இயேசுவின் இறையாட்சியின் பங்காளர்களாக நாம் திகழவும் இறையருள் வேண்டி செபித்து தொடரும் திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கெடுப்போம்.

நற்செய்தி வாசகம். (திருப்பலிக்கு முன்)

ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக!ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 28-40

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களிடம், ஹஹஎதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப் பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், இது ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள்” என்றார்.

அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், இது ஆண்டவருக்குத் தேவை” என்றார்கள்.

பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள். அவர் போய்க்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்த குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்: ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!” என்றனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, போதகரே, உம் சீடர்களைக் கடிந்துகொள்ளும்” என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

திருப்பலி.

முதல் வாசகம்

நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 50:4-7

நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின்; நாவை எனக்கு அளித்துள்ளார்: காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்: கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்:

நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க் கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 22:7-8,16-19,22-23

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?

என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, ‘ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்: தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும”; என்கின்றனர்.பல்லவி

தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது: நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்:பல்லவி

என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்: என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்: என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.பல்லவி

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்: சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே: அவரைப் புகழுங்கள்: யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சி மைப்படுத்துங்கள்: இஸ்ரயேல் மரபினரே,  அனைவரும் அவரைப் பணியுங்கள்.பல்லவி

இரண்டாம் வாசகம்.

கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல் அவரை நமக்காக ஒப்புவித்தார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 2: 6-11

கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண் டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.  மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளி னார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடு வர்: தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர்  என எல்லா நாவுமே அறிக்கையி டும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம் பிலி. 2: 8-9 

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி வாசகம்

மூன்றாம் ஆண்டு.

லூக்கா  எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் பாடுகள்; 23: 1- 49

மன்றாட்டுக்கள்.

1.வெற்றியின் அரசராக உமது மகன் கிறிஸ்துவை வெளிப்படுத்திய இறைவா!இறையாட்சியின் அரசராக துன்புறும் மெசியாவாம் கிறிஸ்துவை எமது வாழ்வின் ஆண்டவராகக் கொண்டு இயேசுக்கிறிஸ்து ஆண்டவரென அறிக்கையிட்டு தூயோராய் இறையாட்சியின் விழுமியங்களுக்கு ஏற்ப வாழ, எங்களை தொடர்ந்தும் புனித வாரத்தினுள் வழிநடத்தி அழைத்துச் செல்லும் திருஅவையின் தலைவராம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தோர் பொதுநிலையினர் அனைவரையும் ஆசீர்வதித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

02.விடுதலை வாழ்வு வழங்கும் இறைவா! உலக நாடுகளெங்கும் அமைதி, சுபீட்சம், ஒற்றுமை, விடுதலை வாழ்வினை மக்கள் பெற்று இயேசுக்கிறிஸ்துவின் அரசுரிமையின் மக்களாக அறிக்கையிட்டு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

03.நலிந்தோரை நல்வாக்கினால் ஊக்குவிக்கும் இறைவா! இவ்வுலகிலே வறுமை, நோய், கவலை பல்வேறு பலவீனங்களோடு துன்ப துயருக்குள்ளாகி வருந்தும் நலிந்தோரை உமது நல்வாக்கினால் நலனும், வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

04.ஆண்டவராகிய எங்கள் தலைவரே! இயேசுவின் பாடுகள், மரணம் வழியாக உயிர்ப்பின் பாஸ்கா மகிழ்வில் பங்குகொள்ள புனித வாரத்தினுள் எங்களை அழைத்துச் செல்கின்ற உமது மீட்புத் திட்ட பயனுக்காக நன்றி கூறுகின்றோம். இவ்வுலகில் எமக்கு வரும் துன்ப, துயர், இடர்களை துன்புறும் ஊழியராம் கிறிஸ்துவின் ஊழியர்களாக ஏற்று உண்மையின் அரசுக்குரியோராய் இப்புனித வாரத்தில் மாற்றம் பெற்றிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்  Psalmsundy2017readings