Category Archives: இன்றைய​ திருப்பலி இறைவார்த்தை

பொதுக்காலம் – 11 வாரம் வெள்ளி

முதல் வாசகம்

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 9-18, 20

அந்நாள்களில் அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரச குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள். அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக் கொண்டு போய் ஒளித்து வைத்தாள். அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா மறைத்து வைத்தாள். எனவே அவன் உயிர் தப்பினான். அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலை மறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள். ஏழாம் ஆண்டில், அரச மெய்க்காப்பாளர், அரண்மனைக் காவலர் ஆகியோரின் நூற்றுவர் தலைவர்களை குரு யோயாதா வரவழைத்து ஆண்டவரின் இல்லத்திற்குள் கூட்டிச் சென்றார். அங்கு அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அக்கோவிலில் அவர்களை ஆணையிடச் செய்து அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டினார். குரு யோயாதா கட்டளையிட்டுக் கூறிய அனைத்தையும் நூற்றுவர் தலைவர்கள் செய்தனர். ஓய்வு நாளில் விடுப்பில் செல்வோர், பணியேற்போர் ஆகிய தங்கள் வீரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு குரு யோயாதாவிடம் வந்தனர். அவர் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டிகளையும் கேடயங்களையும் நூற்றுவர் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார். காவலர், கையில் படைக்கலன் தாங்கி, திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை, பலிபீடத்தையும் திருக்கோவிலையும் அரசனையும் சூழ்ந்து நின்று கொண்டனர். பின்பு அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து, அவனுக்கு முடி சூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி “அரசர் நீடூழி வாழ்க!” என்று முழங்கினர். மக்களும், காவலரும் எழுப்பிய ஒலியை அத்தலியா கேட்டு ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் வந்தாள். மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத்தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “சதி! சதி!” என்று கூக்குரலிட்டாள். அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்ளை நோக்கி, “படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள்” என்று கட்டளையிட்டார். “அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது” என்றும் கூறியிருந்தார். எனவே அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர். அங்கே அவள் கொல்லப்பட்டாள்.
பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக் கொண்டனர். அவ்வாறே அவர் அரசனுக்கும் மக்களுக்கும் இடையே உடன்படிக்கை செய்து வைத்தார். பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்; பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார். நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். அத்தலியா வாளால் அரண்மனையில் கொல்லப்பட்டபின் நகரில் அமைதி நிலவியது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 132: 11. 12. 13-14. 17-18

பல்லவி: ஆண்டவர் சீயோனைத் தம் உறைவிடமாக்க விரும்பினார்.

ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்;
அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்:
“உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். பல்லவி

உன் மைந்தர் என் உடன்படிக்கையையும் நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால்,
அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்.” பல்லவி

ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.
“இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்;
இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். பல்லவி

இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச் செய்வேன்;
நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஓர் ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.
அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்;
அவன்மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும்.” பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம் – 11 வாரம் வியாழன்

முதல் வாசகம்

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-15

இறைவாக்கினர் எலியா நெருப்புபோல் எழுந்தார்; தீவட்டி போல் அவருடைய சொல் பற்றி எரிந்தது. மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? இறந்தவரை உன்னத இறைவனின் சொல்லால் இறப்பினின்றும் பாதாளத்தினின்றும் எழச் செய்தீர். மன்னர்களை அழிவுக்கு உட்படுத்தினீர்; மேன்மைமிக்கவர்களைப் படுத்த படுக்கையாக்கி வீழ்த்தினீர். கடுஞ் சொல்லைச் சீனாய் மலைமீதும், பழி வாங்கும் தீர்ப்பை ஓரேபு மலைமீதும் கேட்டீர். பழி தீர்க்கும்படி மன்னர்களைத் திருப்பொழிவு செய்தீர்; உம் வழித்தோன்றல்களாக இறைவாக்கினர்களை ஏற்படுத்தினீர். தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக் கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில்கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி. எலியா சூறாவளி சூழ மறைந்தார்; எலிசா அவருடைய ஆவியால் நிறைவு பெற்றார்; எலிசா தம் வாழ்நாளில் எந்தத் தலைவருக்கும் அஞ்சவில்லை; அவரை அடிபணிய வைக்க எவராலும் முடியவில்லை. அவரால் முடியாதது ஒன்றுமில்லை; இறந்த பிறகும் அவரது உடல் இறைவாக்கு உரைத்தது. அவர் தம் வாழ்நாளில் அரியன செய்தார்; இறப்பில் அவருடைய செயல்கள் வியப்புக்குரியனவாய் இருந்தன. இவை யாவும் கண்டும் மக்கள் மனம் மாறவில்லை. அவர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டு, மண்ணுலகெங்கும் சிதறடிக்கப்பட்ட வரையிலும் தங்கள் பாவங்களை விட்டு விலகவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 97: 1-2. 3-4. 5-6. 7

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன;
நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

நெருப்பு அவர் முன் செல்கின்றது;
சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன;
மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது. பல்லவி

ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,
மலைகள் மெழுகென உருகுகின்றன.
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;
அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப்
பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்;
அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையேஎன அழைக்கிறோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

முதல் வாசகம்

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 2: 1, 6-14

ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, “ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு” என்றார். அதற்கு அவர், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர். அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர். அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்துகொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர். அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, “உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்” என்று கேட்டார். அதற்கு எலிசா, “உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக!” என்றார். எலியா அவரை நோக்கி, “நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும் போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்; இல்லையெனில் கிடைக்காது” என்றார். இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார். எலிசா அதைக் கண்டு, “என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!” என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காண முடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கொண்டார். மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார். பின்பு அவர், “எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?” என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 31: 19. 20. 23

பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உள்ளத்தில் உறுதி கொண்டிருங்கள்.

உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது!
உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! பல்லவி

மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்!
நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! பல்லவி

ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்;
ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்;
ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள், அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம் – 11 வாரம் செவ்வாய்

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 17-29

அந்நாள்களில் நாபோத்து இறந்தபின், திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: “நீ புறப்பட்டு, சமாரியாவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைப் போய்ப் பார். அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அங்குப் போயிருக்கிறான். நீ அவனிடம் சொல்ல வேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நீ அவனிடம் சொல்ல வேண்டியது. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்.” அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, “என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?” என்று கேட்டான். அதற்கு அவர், “ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய். இதோ! நான் உனக்குத் தீங்கு வரச் செய்வேன். உனது வழிமரபை ஒழித்து விடுவேன். உரிமை மக்களாயினும், அடிமைகள் ஆயினும், இஸ்ரயேல் ஆண்மக்களை ஆகாபிடமிருந்து வெட்டி எறிவேன். நெபாற்றின் மகன் எரோபவாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோல், உன் குடும்பத்திற்கும் செய்வேன். ஏனெனில் நீ இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி எனக்குப் பெருஞ்சினம் மூட்டினாய். மேலும் ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்வது: இஸ்ரியேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும். ஆகாபைச் சார்ந்தவர்கள் நகரினுள் மடிந்தால், நாய்களுக்கு இரையாவர்; நகர்ப்புறத்தே இறந்தால், வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்” என்றார். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யுமளவுக்குத் தன்னையே விற்றுவிட்ட ஆகாபைப் போல் கெட்டவன் எவனும் இருந்ததில்லை. ஏனெனில் அவனுடைய மனைவி ஈசபேல் அவனைத் தூண்டி விட்டாள். மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த எமோரியர் செய்துகொண்ட சிலைகளை எல்லாம் வழிபடும் அளவுக்கு அவன் மிகவும் இழிவாக நடந்து கொண்டான். அச்சொற்களை ஆகாபு கேட்டவுடன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு வெற்றுடல்மீது சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்துச் சாக்குத் துணிமீது படுத்தான்; பணிவோடு நடந்துகொண்டான். அப்பொழுது திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: “என் திருமுன் ஆகாபு தன்னைத் தாழ்த்திக் கொண்டதைக் கண்டாயன்றோ? அவன் என் திருமுன் தன்னைத் தாழ்த்திக்கொண்டதால் நான் அவன் வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின்போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச்செய்வேன்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 51: 1-2. 3-4. 9,14

பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்;
என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி

என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்;
என் பாவக் கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
கடவுளே! எனது மீட்பின் கடவுளே!
இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்;
அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: “ `உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, `பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

ஆண்டின் பொதுக்காலம் – 11ஆம் வாரம் திங்கள்

முதல் வாசகம்

 

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 1-16

அந்நாள்களில் இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. ஆகாபு நாபோத்திடம், “உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகில் இருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்” என்றான். அதற்கு நாபோத்து ஆகாபிடம், “என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!” என்றான். “என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்” என்று இஸ்ரியேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான். அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து, “நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?” என்று அவனைக் கேட்டாள். அதற்கு அவன் அவளிடம், “நான் இஸ்ரியேலனாகிய நாபோத்திடம் பேசினேன். “உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்துவிடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்” என்றேன். அதற்கு அவன் “என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்” என்று சொல்லிவிட்டான்” என்றான். அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்” என்றாள். எனவே அவள் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள். அம்மடல்களில் அவள், “நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள். அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவிவிட்டு, “நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்” என்று அவன் மீது குற்றம் சாட்டச் செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்” என்று எழுதியிருந்தாள். நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர். அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர். அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, “நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்” என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர். பிறகு அவர்கள், “நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்” என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர். நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி, “நீர் எழுந்து சென்று இஸ்ரியேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்” என்றாள். நாபோத்து இறந்து போனதை ஆகாபு கேட்டு, இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 5: 1-2. 4-5. 5-6


பல்லவி: ஆண்டவரே, என் பெருமூச்சைக் கவனித்தருளும்.

ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்;
என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும். பல்லவி

ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை;
உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்கமாட்டார்.பல்லவி

தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;
கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “கண்ணுக்குக் கண்’, `பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

ஆண்டின் பொதுக்காலம் – 10ஆம் வாரம் சனி

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 19-21

அந்நாள்களில் எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர்மீது தூக்கிப் போட்டார். எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன் பின் உம்மைப் பின்செல்வேன் என்றார். அதற்கு அவர், சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்! என்றார். எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 16: 1-2,5. 7-8. 9-10

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்;’ என்று சொன்னேன்.
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்;
எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்;
இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;
உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

 
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-37

அக்காலத்தில் இயேசு கூறியது: “ `பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும் போது `ஆம்’ என்றால் `ஆம்’ எனவும் `இல்லை’ என்றால் `இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

ஆண்டின் பொதுக்காலம் – 10ஆம் வாரம் வெள்ளி

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 9,11-16

அந்நாள்களில் எலியா அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்ல இருக்கிறேன் என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று ஒரு குரல் கேட்டது. அதற்கு அவர், படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர்; உம் பலி பீடங்களைத் தகர்த்து விட்டனர்; உம் இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர் என்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்தவுடன் அசாவேலைச் சிரியாவுக்கு மன்னனாகத் திருப்பொழிவு செய். நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாகத் திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்” என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 27: 7-8. 8-9

பல்லவி: ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.

ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்;
என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
`புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம்.பல்லவி

ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;
நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை;
என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும்.பல்லவி

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்;
உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ `விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. `தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம் 10 – வாரம் வியாழன்

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 41-46

அந்நாள்களில் எலியா ஆகாபை நோக்கி, நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில் பெருமழையின் ஓசை கேட்கிறது என்றார். ஆகாபு உணவும் பானமும் அருந்தச் சென்றவுடன், எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொண்டார். பின்பு அவர் தம் பணியாளனை நோக்கி, நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார் என்றார். அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான். எலியா அவனை நோக்கி, ஏழுமுறை மீண்டும் சென்று பார் என்றார். ஏழாம் முறை அவன் சென்று பார்த்து, இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல் என்றார். இதற்கிடையில் வானம் இருண்டது; கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரியேலுக்குச் சென்றான். அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல் எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, இஸ்ரியேல் வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 65: 9. 9-10. 11-12

பல்லவி: உம்மைப் புகழ்ந்து பாடுவது கடவுளே, ஏற்புடையது!

மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்!
கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது.பல்லவி

நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர்.
அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்;
அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்;
அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்;
உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.
பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன;
குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். `கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; `அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பொதுக்காலம் 10 வாரம் புதன்

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 20-39

அந்நாள்களில் ஆகாபு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் அழைத்தான். பொய் வாக்கினரையும் கர்மேல் மலையில் ஒன்று திரட்டினான். எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால்தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்! அப்பொழுது எலியா மக்களிடம், ஆண்டவரின் திருவாக்கினருள் நான் ஒருவன்தான் எஞ்சியிருக்கிறேன்! பாகாலின் பொய்வாக்கினரோ நானூற்றைம்பது பேர் இருக்கின்றனர். இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவர்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி, விறகின் மேல் வைக்கட்டும்; ஆனால் நெருப்பு வைக்கலாகாது. மற்றக் காளையை நான் தயார் செய்து விறகின் மேல் வைப்பேன்; நானும் நெருப்பு வைக்க மாட்டேன். நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள் என்றார். மக்கள் அனைவரும் பதில் மொழியாக, நீர் சொல்வது சரியே என்றனர். பிறகு எலியா பாகாலின் பொய்வாக்கினரிடம், நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் முதலில் நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்; ஆனால் நெருப்பு மூட்டாதீர்கள் என்றார். அவ்வாறே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையைக் கொண்டு வந்து தயார் செய்த பின், காலை முதல் நண்பகல் வரை பாகாலின் பெயரைக் கூப்பிட்டு, பாகாலே! பதில் தாரும் என்று கத்தினர். ஆனால் எக்குரலும் கேட்க வில்லை; எப்பதிலும் வரவில்லை. எனவே அவர்கள் தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி ஆடலாயினர். நண்பகலாயிற்று, எலியா அவர்களைக் கேலி செய்து, இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். அவன் ஒரு தெய்வம்! ஒரு வேளை அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம் போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அல்லது தூங்கிக் கொண்டிருக்கலாம்; அவன் விழித்தெழ வேண்டியிருக்கும்! என்றார். எனவே அவர்கள் இன்னும் உரத்த குரலில் கத்தினர். தங்கள் வழக்கப்படி வாளினாலும் வேலினாலும், இரத்தம் கொட்டும் வரை, தங்களையே கீறிக் கிழித்துக் கொண்டார்கள். பிற்பகல் ஆயிற்று. அவர்கள் மாலைப் பலி செலுத்தும் நேரம்வரை தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் எக்குரலும் கேட்க வில்லை. எப்பதிலும் வரவில்லை. கவனிப்பார் யாருமில்லை. அப்போது எலியா எல்லா மக்களையும் நோக்கி, என் அருகில் வாருங்கள் என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். உடனே எலியா அங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தைச் செப்பனிட்டார். உன் பெயர் இஸ்ரயேல் என்று ஆண்டவர் யாக்கோபுக்கு உரைத்திருந்ததன் பொருட்டு, அவர் வழிவந்த குலங்களின் எண்ணிக்கைப்படி எலியா பன்னிரு கற்களை எடுத்தார். அக்கற்களைக் கொண்டு ஆண்டவர் பெயரில் ஒரு பலி பீடத்தைக் கட்டி, அப்பலி பீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுகால் அகலம் உள்ள வாய்க்காலை வெட்டினார். அதன்பின் விறகுக் கட்டைகளை அடுக்கி, காளையைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றின் மேல் வைத்தார். நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின் மேலும் ஊற்றுங்கள் என்றார். அவர் இரண்டாம் முறையும் செய்யுங்கள் என்றார். அவர்கள் இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் மூன்றாம் முறையும் செய்யுங்கள் என்றார். அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே செய்தனர். எனவே தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது. மேலும் வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார். மாலைப் பலி செலுத்தும் நேரமாயிற்று. இறைவாக்கினர் எலியா பலிபீடத்தின் அருகில் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுள் நீரே என்றும், இவற்றையெல்லாம் நான் உம் வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்தருளும். நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில் தாரும்! ஆண்டவரே! எனக்குப் பதில் தாரும்! என்றார். உடனே ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும் விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது. இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து, ஆண்டவரே கடவுள்! ஆண்டவரே கடவுள்! என்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 16: 1-2. 4. 5,8.

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்’ என்று சொன்னேன். பல்லவி

வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்;
அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்துகொள்ளேன்;
அவற்றின் பெயரைக் கூட நாவினால் உச்சரியேன்.பல்லவி

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்;
எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு;
உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 7-16

அப்பொழுது ஆண்டவரது வாக்கு எலியாவுக்கு வந்தது: நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா? என்றார். அவர், வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும் என்றார்.
எலியா அவரிடம், அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது என்று சொன்னார். அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை, கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 4: 1-2. 3-4. 6-7

பல்லவி: ஆண்டவரே, எங்கள்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்.

எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்;
நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;
இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;
மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?
எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? பல்லவி

ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்;
நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவிசாய்க்கின்றார்; – இதை அறிந்துகொள்ளுங்கள்.
சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;
படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாய் இருங்கள். பல்லவி

ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படி செய்தருளும்.
தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியை விட
மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.