பொதுக்காலம் – 11 வாரம் வியாழன்

முதல் வாசகம்

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-15

இறைவாக்கினர் எலியா நெருப்புபோல் எழுந்தார்; தீவட்டி போல் அவருடைய சொல் பற்றி எரிந்தது. மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? இறந்தவரை உன்னத இறைவனின் சொல்லால் இறப்பினின்றும் பாதாளத்தினின்றும் எழச் செய்தீர். மன்னர்களை அழிவுக்கு உட்படுத்தினீர்; மேன்மைமிக்கவர்களைப் படுத்த படுக்கையாக்கி வீழ்த்தினீர். கடுஞ் சொல்லைச் சீனாய் மலைமீதும், பழி வாங்கும் தீர்ப்பை ஓரேபு மலைமீதும் கேட்டீர். பழி தீர்க்கும்படி மன்னர்களைத் திருப்பொழிவு செய்தீர்; உம் வழித்தோன்றல்களாக இறைவாக்கினர்களை ஏற்படுத்தினீர். தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக் கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில்கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி. எலியா சூறாவளி சூழ மறைந்தார்; எலிசா அவருடைய ஆவியால் நிறைவு பெற்றார்; எலிசா தம் வாழ்நாளில் எந்தத் தலைவருக்கும் அஞ்சவில்லை; அவரை அடிபணிய வைக்க எவராலும் முடியவில்லை. அவரால் முடியாதது ஒன்றுமில்லை; இறந்த பிறகும் அவரது உடல் இறைவாக்கு உரைத்தது. அவர் தம் வாழ்நாளில் அரியன செய்தார்; இறப்பில் அவருடைய செயல்கள் வியப்புக்குரியனவாய் இருந்தன. இவை யாவும் கண்டும் மக்கள் மனம் மாறவில்லை. அவர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டு, மண்ணுலகெங்கும் சிதறடிக்கப்பட்ட வரையிலும் தங்கள் பாவங்களை விட்டு விலகவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 97: 1-2. 3-4. 5-6. 7

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன;
நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

நெருப்பு அவர் முன் செல்கின்றது;
சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன;
மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது. பல்லவி

ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,
மலைகள் மெழுகென உருகுகின்றன.
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;
அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப்
பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்;
அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையேஎன அழைக்கிறோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *