சிலாபம் மறைமாவட்டத்தின் அருட்ப்பணிப் பரப்பெல்லைககுள் அமைந்துள்ள வில்பத்து வனவிலங்கு பாதுகாப்பிடக் காட்டின் நடுவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா இன்று (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய திருவிழாத் திருப்பலியை சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி வலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை அவர்கள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் ஒப்புக்கொடுத்தார். இத் திருவிழாத் திருப்பலியில் பெருந்தொகையான பக்தர்கள், குருக்கள், துறவிகள், அரச மற்றும் அரச சார்பற்ற பணியாளர்கள் கலந்து செபித்தனர்.
நீண்டகால ஆன்மிக வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட இத்திருத்தலம் புத்தளம் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்திருந்தாலும், மன்னார் கத்தோலிக்க மக்களின் பராமரிப்பிலேயே இருந்து வந்தது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் பகுதியில் வாழும் சில தமிழ்க் கத்தோலிக்க மக்கள் பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தலப் பகுதியைப் பூர்விமாகக் கொண்டவர்கள் என்ற வரலாற்றுக் குறிப்பு வாய்மொழிப் பாரம்பரியமாக இருந்து வருகின்றது.
நீண்டகாலமாக, குறிப்பாக முள்ளிக்குளம் தூய பரலோகமாதா ஆலய அருட்பணிப் பேரவை இத் திருத்தலத்திற்குப் பொறுப்பாகவிருந்து ஆன்மிகச் செயற்பாடுகள் அனைத்தையும் ஆன்னொடுத்து வந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் , இத்திருத்தலம் சிலாப மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைக்குள் வருவதால் அதனை சிலாபம் மறை மாவட்டத்தினால் நிர்வகிப்பதே பொருத்தமானதென வேண்டுகை முன்வைக்கப்பட்டதால், முன்னைநாள் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் அதனை சிலாபம் மறைமாவட்ட ஆயாரிடம் கையளித்தார்.