பொதுக்காலம், வாரம் 28 வெள்ளி

முதல் வாசகம்


திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திரு முகத்திலிருந்து வாசகம் 4: 1-8

சகோதரர் சகோதரிகளே, இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை. ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? “ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.” வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவது இல்லை; அது அவர்கள் உரிமை. தம் செயல்கள் மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்று இல்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார். அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்: “எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறுபெற்றவர்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 32: 1-2. 5. 11 

பல்லவி: என் புகலிடமான ஆண்டவரே, உம் மீட்பின் ஆரவாரம் ஒலிக்கின்றது.

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம்
மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.  ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ,
எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர்.பல்லவி

என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்;  என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்’ என்று சொன்னேன்.
நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.பல்லவி

நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்;
நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக்கா 12:1-7

அல்லேலூயா, அல்லேலூயா! உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லேலூயா.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
13: 10-17

அக்காலத்தில் ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் வேண்டாம்” என்றார். ஆண்டவரோ அவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?” என்று கேட்டார். அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப் பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *