இயேசு கிறிஸ்துவே நம் மகிழ்வு என்பதையும், அவரின் அன்பு மாறாதது மற்றும், குறையாதது என்பதையும், நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.
கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு விலகியிருப்பவர்களுக்காகச் செபிப்போம் என்ற தலைப்பில், தனது ஜூலை மாதச் செபக் கருத்து பற்றி, காணொளி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை, ஒரு கிறிஸ்தவர், கவலையாக இருக்கின்றார் என்றால், அவர், இயேசுவிடமிருந்து விலகியிருக்கின்றார் என்று அர்த்தம் எனக் கூறியுள்ளார்.
ஆயினும், கிறிஸ்துவைவிட்டு விலகியிருப்பவர்களை நாம் கைவிடக் கூடாது என்றும், நம் சொற்கள், இன்னும், சிறப்பாக, நம் மகிழ்வான சாட்சிய வாழ்வு மற்றும், நம் சுதந்திரத்தோடு, கிறிஸ்தவ நம்பிக்கையை அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு விலகியிருப்பவர்களுக்காகச் செபிப்போம் எனவும், நம் செபங்கள் மற்றும், நற்செய்திக்குச் சான்று பகர்வதன் வழியாக, கிறிஸ்தவ வாழ்வின் அழகை, அவர்கள் மீண்டும் கண்டுகொள்வார்களாக எனவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.