திருவருகைக் காலம் முதல் ஞாயிறு.

2019.12.01.

முன்னுரை.

அகமகிழ்வேடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம். வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தமது பேரன்பை நமக்;குக் காட்டி, தமது மீட்பையும் நமக்குத்; தரும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவருகைக்கால முதல் ஞாயிறு திருப்பலி யைக்  கொண்டாடுகின்றோம்.

இறுதிக்காலம் இதுவே, மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம் என்னும் உயரிய அழைப்பு இன்று நமக்குக் கொடுக்கப்படுகின்றது. தங்கள் வாள்க ளைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார் கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது. அவர்கள் இனி ஒருபோதும் போர்ப் பயிற்சி பெற மாட்டார்கள் என்பது அண்டவரிமிருந்து நமக்குக் கிடைக்கவிருக்கும் அமைதியையும், நிறை ஆசீரையும்; குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

இந்த வாக்குறுதிகளுக்காக நன்றி கூறிக்கொண்டு, இருளின் ஆட்சிக்குரிய செயல்களான: களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்கள் ஆகியவற்றைக் களைந்துவிட்டு, இயேசு கிறிஸ்துவை நம் மீட்பராக ஏற்று விசுவசித்து அவர் காட்டும் வழியில் நடக்க  வேண்டும் அருள் வரம் கேட்டுத்; தொடரும் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்.

இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்று சேர்க்கின்றார்.

இறைவாக்கினர் எசாயா  நூலிருந்து வாசகம். 2:1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி:

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும். எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும். மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம். யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார். நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும். எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார். பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார். அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது. அவர்கள் இனி ஒருபோதும் போப்ப் பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 122: 1-2, 4-9

பல்லவி: அகமகிழ்வேடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”, என்ற அழைப்பை நான் கேட்டபோது அக மகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.பல்லவி:

ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர். இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.பல்லவி:

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள். ‘உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!பல்லவி:

உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

நமது மீட்பு மிக அண்மையில் உள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13:11-14

சகோதரர் சகோதரிகளே,

இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள். உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.

இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடி வெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. திபா.85:7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும். உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

விழிப்பாயிருங்கள். ஆயத்தமாய் இருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  24:37-44

அக்காலத்தில்

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:

நோவாவின் காலத்தில் இருந்ததுபோலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப் பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.

விழிப்பாயிருங்கள். ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரி மையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. நல்வாழ்வையும், உடல் நலத்தையும் நிறைவாகத் தரும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொண்டு இறைமக்களை நிறை உண்மையை நோக்கி வழிநடாத்திடத் தேவையான வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. மீட்பளிக்கும் தந்தையே இறைவா!  நாங்கள், களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்கள் ஆகியவற்றைக் களைந்து,  விட்டு. இயேசு கிறிஸ்துவை எம் மீட்பராக ஏற்று விசுவசித்து அவர் காட்டும் வழியில் நடக்க  எமக்கு அருள்; தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. தீமை அனைத்தில் இருந்தும் எம்மை விடுவிக்கும் தந்தையே இறைவா! எமது விசுவாச வாழ் வைக் குழப்பும் சக்திகள் அனைத்தையும் நாம் முறியடித்து, உண்மையாம் கிறிஸ்து காட்டும் வழிக ளைப் பின்பற்றி வாழ்ந்திட அருள் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.
  4. மீட்பளிக்கும் தந்தையே இறைவா! சிறைகளுக்குள்ளும், வதை முகாம்களுக்குள்ளும், தடுப்பு முகாம்களுக்குள்ளும் அடைபட்டு வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் விடுதலைபெற்று அமைதியோடும், பாது காப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்     1st Sunday of Advent 2019

திருவருகைக் கால வளையம்

திருவருகைக் கால வளையம்.( உணர்ந்து செயற்படுவோம்.)

ஜரோப்பிய நாடுகளில் வாழும் சுதேச மக்கள் தங்கள் சமய, சமூக வாழ்வில்,அந்நாடுகளின் கால நிலைக் கேற்ப சில வழங்களைக் கொண்டு செயற்படுகின்றனர். அவற்றுள் கத்தோலிக்க மக்கள் திருவருகைக் காலத்தில் தமது வீடுகளில் என்றும் பசுமையாக இருக்கும் இலைகளினால் வடிவமைக்கப்பட்ட வட்ட வடிவமான ஒரு அமைப்பிலே நான்கு மெழுகுதிரிகளை வைத்து திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு திரியாககப் பற்றவைப்பதுண்டு. குறிப்பாக ஆலயங்களில் ஆன்மிகச் செழுமை நிறைந்த கருத்தோடு இது ஏற்றப்படுகின்றது. இருந்தும் நம்மில் பலர் இதன் உண்மைத் தன்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாது செயற்படுவதுண்டு. எனவே அதற்கான சில தெளிவுகளை முன்வைக்க வரும்புகின்றோம்.

மேலும் அறிய திருவருகைக் கால வளையம்

அருட்பணித் திட்டமிடல் மாநாடு 21 – 23.11.2019

அன்பிய வாழ்வினூடாக கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சியை நோக்கி  என்னும் இலக்கை புதுப்பித்தலுக்கான தளமாகக் கொண்டு, இயேசு காட்டும் ஆன்மிகப் பதிவுகளை வாழவேண்டுமென்ற வாஞ்சையோடு மன்னார் மறைமாவட்டம் வருடந்தோறும் நடாத்திவரும் அருட்பணித் திட்டமிடல் மாநாடு 21 – 23.11.2019 மேலும் அறிய அருட்பணித் திட்டமிடல் மாநாடு 21 – 23.11.2019

அருட்சகோதரி பவுஸ்தினாவின் திருப்பண்டம் மன்னார் மறைமாவட்டத்திற்கு

போலந்து நாட்டின் கிறாக்கோ பகுதியில் அமைந்துள்ள நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து இறை இரக்கத்தின் பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு அருட்சகோதரி புனித பவுஸ்தினாவிடம் கேட்டுக் கொண்ட இடத்திலுள்ள ஆலயத்திலிருந்து அருட்சகோதரி பவுஸ்தினாவின் திருப்பண்டம் அருட்பணி லெஸ்லி ஜெகாந்தன் அடிகளாரின் அயரா முயற்சியினால் மன்னார் மறைமாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. மேலும் அறிய அருட்சகோதரி பவுஸ்தினாவின் திருப்பண்டம் மன்னார் மறைமாவட்டத்திற்கு