நம் எதிர்நோக்கின் ஊற்று’

கிறிஸ்தவ எதிர் நோக்கு குறித்த தன் மறைக்கல்வி உரைத்தொடரில் இப்புதனன்று, லூக்கா நற்செய்தி 11ம் பிரிவின் முதல் பகுதியில் காணப்படும், இயேசு கற்பித்த ‘வானகத்திலுள்ள எம்

தந்தாய்’ என்ற செபம் முதலில் வாசிக்கப்பட,  ‘இறைவனின் தந்தைப்பேறே, நம் எதிர்நோக்கின் ஊற்று’ என்ற தலைப்பில் உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே, கிறிஸ்தவ எதிர்நோக்கு குறித்த நம் புதன் மறைக்கல்வித் தொடரில், இன்று, ‘நம் எதிர்நோக்கின் ஆதாரமாக, இறைவனின் தந்தைப்பேறே உள்ளது’ என்பது குறித்து சிந்திப்போம். தங்களுக்கு செபிக்கக் கற்றுத்தருமாறு, இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டபோது, இறைவனை தந்தை என அழைக்குமாறு சொல்லித்தருகிறார் இயேசு. இங்குதான் கிறிஸ்தவம் கொணர்ந்த மிகப்பெரிய மதப்புரட்சியைப் பார்க்கிறோம். மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்ட நாம், அனைத்தையும் தாண்டிய புனிதம்நிறை கடவுளிடம், ஓர் அன்பு நிறைந்த தந்தையிடம் பேசுவதுபோல், முழு நம்பிக்கையுடன், குழந்தைகளாக, அச்சமின்றி உரையாடும் தகுதியைப் பெறுகின்றோம்.

காணாமற்போன மகன் உவமையில், தன் மகனை உன்னத மன்னிப்புடன் வரவேற்கும், இரக்கம் நிறைந்த தந்தையைப்போன்ற, இறைவனின் முன்நிபந்தனையற்ற அன்பைக் குறித்து நமக்கு எடுத்துரைக்கிறார், இயேசு. புனித பவுலும் தன் திருமடல்களில், இயேசு அரமேய மொழியில் பயன்படுத்திய ‘அப்பா’ என்ற வார்த்தையை இருமுறை பயன்படுத்தியுள்ளார் (உரோமை. 8:15; கலாத்தி. 4:6). தூய ஆவியாரால் புதல்வர்களாகவும், புதல்வியர்களாகவும் கடவுளால் தத்துப்பிள்ளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாம், இயேசுவுக்கும் தந்தையாம் இறைவனுக்கும் இடையேயுள்ள ஆழமான உறவில் நெருங்கிய பங்கெடுக்கிறோம். இதுவே, இறைவனின் மீட்பு உதவியில், நம் உறுதியான எதிர்நோக்கு. இயேசு நமக்குக் கற்பித்த செபத்தை, நாம் ஒவ்வொரு நாளும் செபிக்கும்போது, கடவுள் தன் கருணை நிறை அன்புடன், நம்மை அக்கறையுடன் கண்காணிக்கிறார், நமது வேண்டுதல்களுக்கு பதிலளிக்கிறார், நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்ற உண்மையில் ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்தப்படுவோமாக.

புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும், குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், கொரியா, ஹாங்காங், தாய்வான் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்து குழுமியிருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் பவியா நகரின் குழந்தைகள் புற்று நோய் மருத்துவமனையிலிருந்து இம்மறைக்கல்வித்தொடரில் பங்குபெற வந்திருந்த சிறார்களுக்கு தனிப்பட்டமுறையில் தன் வாழ்த்துக்களை வெளியிட்டார்.

இறுதியில், விண்ணப்பம் ஒன்றையும் அனைவருக்கும் முன்வைத்தார் திருத்தந்தை. இவ்வியாழனன்று, அதாவது ஜூன் மாதம் 8ம் தேதி நண்பகல் ஒரு மணிக்கு ‘அமைதிக்காக ஒரு நிமிடம்’ என்ற பெயரில் உலகெங்கும் கடைபிடிக்கப்பட உள்ள செப முயற்சியை நினைவூட்டினார். 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி, இஸ்ரேல் அரசுத்தலைவர் ஷிமோன் பெரெஸ் அவர்களும், பாலஸ்தீனிய அரசுத்தலைவர் மக்மூது அப்பாஸ் அவர்களும், வத்திக்கானில் தன்னுடன் இணைந்து, அமைதிக்காக செபித்ததன் நினைவாக, இந்த ஒரு நிமிட செபம் மேற்கொள்ளப்படுவதாக திருத்தந்தை அறிவித்தார். கிறிஸ்தவர்கள், எபிரேயர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் அமைதிக்காக செபிக்க வேண்டியது நம் காலத்தின் மிகப்பெரிய தேவையாக உள்ளது  என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *