தவக்காலம் முதலாம் ஞாயிறு 10.03.2019

 

முன்னுரை –

அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்.”

இறை இயேசுவில் அன்புநிறை இறைமக்களே!

2019 பங்குனித் திங்கள் பத்தாம் நாளின்று தவக்கால முதலாம் ஞாயிறு வாரத்தினுள் நுழைகின்றோம். “இயேசு கிறிஸ்துவின் சோதனை ஞாயிறு” என்றும், இம்முதல் வாரம், அழைக்கப்படுகின்றது. மூதாதையரின் கடவுளை பணிந்து தொழும் திரு அவை சமூகமாக ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கெடுக்க ஒன்றுகூடி வந்திருக்கும் அனைவரையும் பலி நிறைவேற்றும் அருட்பணியாளரையும் அன்புடன் வரவேற்றழைக்கின்றோம்.

திருமுழுக்குக் காலமே தவக்காலம் என்பர். திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவின் பாடுகள் மரணம், உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மகிழ்வில் முழுமையாக பங்கெடுத்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளும் காலமாகும். பாவத்திற்கு மரித்து புனிதத்தோடு உயிர்த்தெழும் அருளின் காலமாகும். ஆண்டவரை நோக்கி குரல் எழுப்பி, அவரைப் பணிந்து தொழுது நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்த்து மனம் வருந்தி மனமாற்றம் அடையும் காலத்தை சரியாக பயன்படுத்தி மனிதரோடும் கடவுளோடும் ஒப்பரவாகிட அழைக்கும் காலம் ஆகும்.

நாம் தொடங்கும் தவக்கால முதல்வாரத்தில் அலகையின் சோதனைகளை வெற்றி கொண்ட கிறிஸ்துவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு எவ்வகை துன்ப, துயர, சோதனை வேதனைகளிலும் வார்த்தை உனக்கு மிக அருகில் இருக்கிறது. என்பதை அறிந்து அதைப் பற்றிக் கொண்டு ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடி சோதனைகளில் வெற்றி பெறும் கிறிஸ்துவைச் சார்ந்தோராய் நீரே என் புகலிடம் என் அரண் நான் நம்பியிருக்கும் இறைவன் நீரே என செபித்து இறை அருள் வேண்டி தொடரும் கல்வாரித் திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம்
தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தின் விசுவாச அறிக்கை.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 4-10
மோசே மக்களை நோக்கிக் கூறியது: முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார்.
நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார்.
எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டி வந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.
எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற் பலனைக் கொண்டுவந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15 (பல்லவி: 15b)
பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.

 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்.  ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்’ என்று உரைப்பார். பல்லவி

தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். பல்லவி

 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.  சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். பல்லவி

அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்;  அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்’. பல்லவி

இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவில் விசுவசிக்கிறவனுக்குரிய விசுவாச அறிக்கை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 8-13
சகோதரர் சகோதரிகளே, மறைநூலில் சொல்லியிருப்பது இதுவே: “வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.” இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும்.
ஏனெனில், `இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்.
இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், “அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்” என்பது மறைநூல் கூற்று.
இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். “ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்” என்று எழுதியுள்ளது அல்லவா?
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்
மத் 4: 4b
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

நற்செய்தி வாசகம்
பாலைநிலத்திற்கு இயேசு அழைத்துச் செல்லப்பட்டார்; சோதிக்கப்பட்டார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-13
அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றைவிட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன்பின் அவர் பசியுற்றார்.
அப்பொழுது அலகை அவரிடம், “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது.
அதனிடம் இயேசு மறுமொழியாக, “ `மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.
பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், “இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்” என்றது.
இயேசு அதனிடம் மறுமொழியாக, “ `உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.
பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; `உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் `உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது.
இயேசு அதனிடம் மறுமொழியாக, “ `உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் சொல்லியுள்ளதே” என்றார்.
அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்த பின்பு, ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டு

01.எங்கள் மூதாதையரின் கடவுளாகிய இறைவா! நீரே என் புகலிடம், என் அரண், நான் நம்பியிருக்கும் இறைவன், எனும் நம்பிக்கையுடையோராய் வாழ, திரு அவைச் சமூகத்தை அருளின் மனமாற்ற, தவக்காலத்தினுள் வழிநடத்திச் செல்லும், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலைப் பணியோர் அனைவரையும் தூய ஆவியினால் ஆசீர்வதித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 02.தீங்கு உமக்கு நேரிடாது, என மொழிந்த இறைவா! உலக நாடுகள் எங்கும் நடைபெறும், அமைதிக்கு எதிரான, இனஅழிப்பு, யுத்தம், பகை, குரோத மனப்பாங்கும் தீங்குகளும் அகன்று, மக்களனைவரும் உன்னதராகி உமது பாதுகாப்பில் வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

03.துன்பத்தில் தப்புவித்து பெருமைப்படுத்தும் இறைவா! பல்வேறு துன்ப, துயர், மனக்கவலை, விரக்தி, தனிமை, நோய் போன்ற தொல்லைகளால் அவதியுற்று வருந்துவோருக்கு மகிழ்ச்சி நிறை நல்வாழ்வு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

04.அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன் என மொழிந்த இறைவா!மனமாற்றத்தின் தவக்காலத்தில் செப, தப, தான தரும நற்செயல்களை பிறர் அன்புப் பணியாக கருதி, பிறருக்கு உதவிடும் நல் உள்ளத்தை எம்மில் அதிகரிக்கச் செய்தருளும். நாங்கள் தீமைகளை களைந்தவர்களாய், இயேசுவின் பாடுகளில் ஒன்றித்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்  Lent2019First Sunday

 

கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.

ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்? யோவேல்  2: 12-18