ஆயர் இரா. யோசேப்பு நினைவு நூலகம்.

மறைந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் நினைவாக மடுமாதா திருத்தலத்தில் அமைந்துள்ள புனித ஜோண் மரிய வியான்னி ஆன்மிக அமைதி முன்னெடுப்பு மையத்தில் ஆயர் இரா. யோசேப்பு நினைவு நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மறைந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் நினைவாக மடுமாதா திருத்தலத்தில் அமைந்துள்ள புனித ஜோண் மரிய வியான்னி ஆன்மிக அமைதி முன்னெடுப்பு மையத்தில் ஆயர் இரா. யோசேப்பு நினைவு நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 24.07.2021 சனிக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களும் இணைந்து ஆசீர்வதித்து திறந்து வைத்தனர்.

இவ் வேளையில் மன்னார் மாவட்டச் செயலர் மதிப்புக்குரிய திருமதி ஸ்ரன்லி டிமெல் லெம்பேட் அவர்களும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்கலாநிதி ஜோசப் ஜெபரெட்ணம் அடிகளாரும், மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரும், மறைந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் உறவினர்களும், மனி உரிமைப்பணி ஆர்வலர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

மறைந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் வரலாற்றுப் பதிவாகிவிட்ட மனித நேயப் பணிக்கான அடையாளமாகவும், அவர்  தன் வாழ்நாளில் தன்னை அர்ப்பணித்து பணியாற்றிய  தளங்களான மனித உரிமை, அமைதி, நீதி, சகோதரத்தும், உண்மை, விடுதலை போன்றவற்றினைத் தொடர்ந்து வலுப்படுத்தவும். அமைதி,  நல்லிணக்கம், மனித உரிமை போன்றவற்றை ஊக்குவிக்கவும், இவைபற்றிய விஞ்ஞான ரீதியாக தேடல்களை மேற்கொள்ளவும், தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும் முதல் நிலை எண்ணத்தைக் கருவாகக் கொண்டு இந் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் முயற்சியினால் பரிந்துரைக்கப்பட்டதும், வடக்கு, கிழக்கு மறைமாவட்டங்களில் பணியாற்றும் ஆயர் பெருந்தகைகளின் சிந்தனையில் உருவானதுமான ஒரு தரின களமாகும்.

இந் நூலகத்தின் உள்ளும் புறமும்,  அமைதி , நல்லிணக்கம், மனித உரிமை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஓவியங்களும், கருத்துப் பதிவு அடையாளங்களும் உருவாக்கப்பட்டுள்தோடு பெறுமதி மிக்க நூல்களும் உள்ளடக்கப்பட்டுள்ள. இந் நூலகத்தின் அமைப்புப் பணிகளை  மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் ஆலோசனையோடும் வழிநடாத்துதலோடும் புனித ஜோண் மரிய வியான்னி ஆன்மிக அமைதி முன்னெடுப்பு மையத்தின் தற்போதைய இயக்குனர் அருட்கலாநிதி அ.கிறிஸ்ரி றூபன் பெனாண்டோ அடிகளார் முன்னெடுத்துச் சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *