மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள புனித அன்னை வேளாங்கன்னி ஆலயம் மீளுருவாக்கம் செய்யப்பட்டு 03.02.2020 திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின்திருவழிபாட்டு திருமரபின்படி அர்ச்சித்து‚ ஆசீர்வதித்து திறந்த வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள புனித அன்னை வேளாங்கன்னி ஆலயம் மீளுருவாக்கம் செய்யப்பட்டு 03.02.2020 திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின்திருவழிபாட்டு திருமரபின்படி அர்ச்சித்து‚ ஆசீர்வதித்து திறந்த வைக்கப்பட்டது.
இது ஒரு புதிய ஆலயம் அல்ல. இச் சிற்றாலயம் நீண்டதொரு கத்தோலிக்க விசுவாசத்தின் பாரம்பரியமாகத் திகழ்கின்றது. இப்பொழுது மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலை அமைந்துள்ள நிலப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க திரு அவையின் துறவற சபையான பிரான்சிஸ்கன் சபை அருட் சகோதரிகள் சிறிய வைத்தியசாலை யொன்றினை அமைத்து அக்காலகட்டத்தில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுக நலப் பணியினை ஆற்றி வந்தனர். அவர்கள் அங்கு பணியாற்றி வந்தபோது தங்களது ஆன்மிகத் தேவைக்கென அவர்களுடைய வதிவிடத்தோடு சேர்த்து இச் சிற்றாலயத்தை அமைத்தனர். காலப் போக்கில் சிகிச்சை பெற வந்தோரின் வேண்டுகையின் அடிப்படையில் இது நோயளருக்கான வழிபாட்டிற்காகவும் திறந்து விடப்பட்து.
வரலாற்றுக் கோவையின் தரவுகளின்படி தற்போதைய மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தந்தை வடமாகாணத்தில் தொழில் நுட்ப அலுவலராகப் பணியாற்றிய வேளையில் இச் சிற்றாலயத்திற்கான கட்டிடப் பணியை மேற்கொள்ள தொழில் நுட்ப உதவிகளை வழங்கியதாகவும்‚ மன்னார் புனித மரியன்னை ஆலயத்திலிருந்து இச் சிற்றாலயம் வரை நற்கருணைப் பவனி நடாத்த உதவிபுரிந்ததாகவும் வரலாற்றுப் பதிவுகள் உறுதி செய்கின்றன.
பல ஆண்டுகளின் பின்னர் பிரான்சிஸ்கன் சபை அருட் சகோதரிகள் தங்கள் பணி எல்லையை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டதால் இப் பொழுது மன்னார் மாவட்ட வைத்தியசாலை அமைந்துள்ள காணியையும் அங்கு தாங்கள் அமைத்திருந்த கட்டிடங்களையும் இலங்கை அரசிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
அக்காலம் தொடக்கம் இங்கு ஆன்மிக நலன்களை அள்ளி வழங்கி வந்த இச் சிற்றாலயம் புனரமைப்புச் செய்யப்படவேண்டிய அசியத் தேவை இருந்ததால் மன்னார் மறைமாவட்ட முன்னை நாள் ஓய்வுநிலை ஆயர் பேரருட்கலாநிதி இரா.யோசேப்பு ஆண்டகை அவர்கள் இச் சிற்றாலயத்தை புனரமைக்கும் நோக்கோடு பணிகளைத் தொடக்கி வைத்தார். முதலில் மன்னார் மறைமாவட்டக் குருக்கள் இச் சிற்றாலயத்தில் ஆன்மிகப் பணிகளை முன்னெடுத்தச் சென்றனர். அதன் பின் இதனை ஆன்மிகப் பணிக்கென ஓய்வுநிலை ஆயர் பேரருட்கலாநிதி இரா.யோசேப்பு ஆண்டகை அவர்கள் யாழ் மாகாண அமலமரித் தியாகிகள் துறைவற சபையிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து அங்கு பணியாற்றி அருட்பணியாளர்களின் பெரு முயற்சியினாலும்‚ மன்னார் பொது வைத்தியசாலைப் பணியாளர்களின் அர்பணிப்பினாலும்‚ பொது மக்களின் உதவியினாலும்‚ மன்னார் மறைமாவட்டத்தின் பங்களிப்போடும் இச் சிற்றாலயம் சிறப்பாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ்வேளையில்ல் இச் சிற்றாலயத்தின் பணிகளை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற அருட்பணி.அ.யூட் கறோவ் அடிகளார் பாராட்டப்படவேண்டியவர். தற்போது இவர் பணிமாற்றம் பெற்றுச் செல்ல இங்கு பணிபுரிய அருட்பணி. இயேசு பாலன் அடிகளார் புதிதாக நியமனம் பெற்று வந்துள்ளார்.