திருவருகைக் கால வளையம்

திருவருகைக் கால வளையம்.( உணர்ந்து செயற்படுவோம்.)

ஜரோப்பிய நாடுகளில் வாழும் சுதேச மக்கள் தங்கள் சமய, சமூக வாழ்வில்,அந்நாடுகளின் கால நிலைக் கேற்ப சில வழங்களைக் கொண்டு செயற்படுகின்றனர். அவற்றுள் கத்தோலிக்க மக்கள் திருவருகைக் காலத்தில் தமது வீடுகளில் என்றும் பசுமையாக இருக்கும் இலைகளினால் வடிவமைக்கப்பட்ட வட்ட வடிவமான ஒரு அமைப்பிலே நான்கு மெழுகுதிரிகளை வைத்து திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு திரியாககப் பற்றவைப்பதுண்டு. குறிப்பாக ஆலயங்களில் ஆன்மிகச் செழுமை நிறைந்த கருத்தோடு இது ஏற்றப்படுகின்றது. இருந்தும் நம்மில் பலர் இதன் உண்மைத் தன்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாது செயற்படுவதுண்டு. எனவே அதற்கான சில தெளிவுகளை முன்வைக்க வரும்புகின்றோம்.

பசுமை இலைகளினால்  ஆக்கப்பட்ட திருவருகைக் கால வளையம் அழகானது. பல்வேறு பசுமையான இலைகளினால் அமைக்கப்பட்ட இவ் வளையம் வாழ்வின் தொடர்ச்சியையும், அதன் வளமையையும் குறித்து நிற்கின்றது. குறிப்பாக இவ் வளையம் உருவாக்கப் பயன்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கி நிற்கின்றன.

இந்த வளையம் ஒரு வெற்றிச்சின்னம். அதாவது துன்பத்தின் மீதும்,துன்புறுத்தலின் மீதும் வெற்றி கொள்வதைக் குறிக்கின்றது. அங்குள்ள ஊசியிலைகள், கரும்பச்சை நிற இலைகள், மரப்பட்டை என்பன அழியாமையையும் –  என்றும் உதிராமல் இருக்கும் மரத்தின் இலைகள் பலத்தையும், குணமளித்தலையும்  குறிப்பதோடு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து முடிவில்லாக் கடவுளின் பிரசன்னத்தையும், ஆன்மாவின் அழியாமையையும், கிறிஸ்துவிடம் முடிவில்லா வாழ்வைக் கண்டு கொள்ள முடியும் என்பதனையும், வாழ்வையும், உயிர்த்தெழுதலையும் குறித்து நிற்கின்றன.

நான்கு மெழுகுதிரிகளும் திருவருகைக் காலத்தின் நான்கு ஞாயிறு வாரத்தையும் குறித்து நிற்கின்றன. இவற்றுள் மூன்று ஊதா நிறமுடையதாகவும், இன்னொன்று மெல்லிய சிவப்பு அல்லது றோஸ் நிறமுடையதாகவும் இருக்கின்றது. முன்று மெழுகுதிரிகள் செபம், தியாகம், தூய்மையான ஆயத்தம் என்பனவற்றை நம்பிக்கை , அன்பு, அமைதி அகியவற்றோடு இணைத்து வெளிப்படுத்தி நிற்கின்றது. றோஸ் மெழுகுதிரி திருவருகைக்கால மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை பற்றவைக்கப் படுகின்றது. இது பேருவகை, அல்லது பெருமகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கின்றது. அதாவது கிறிஸ்துவின் வருகை மிக அருகில் வந்து விட்டது என்பதின் அடையாளமே அது. நடுவில் உள்ள வெள்ளை மெழுகுதிரி கிறிஸ்துவே உலகின் ஒளி என்பதைப் பிரசன்னப்படுத்தி நிற்கின்றது.

குடும்பங்களிலே பெரும்பாலும் இரவு உணவின் போது இம் மெழுகுதிரிகள் ஏற்றப்படுகின்றன. திருவருகைக் கால முதல் ஞாயிறு குடும்பத்தின் தலைவர் உணவை ஆசீர்வதித்தபின்,  திருவருகைக்கால அலங்கார வளையத்தை பின்வரும் செபத்தைச் சொல்லி ஆசீர்வதிப்பார். மாட்சி நிறைந்த கடவுளே! உமது வார்த்தையினால் அனைத்தையும் தூய்மைப்படுத்தியவரே,  உமது ஆசீரை இவ் அலங்கார வளையத்தின் மீது பொழிவீராக, இதனைப் பயன்படுத்தும் நாங்கள் கிறிஸ்துவின் வருகைக்காக எம்மைத் தகுந்த முறையில் தயார்படுத்தவும்,  உமது அளவில்லா ஆசீரைப் பெறவும் அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே உம்மை மன்றாடுகின்றோம், ஆமென். இதனைத் தொடர்ந்து குடும்பத்தின் இளைய குழந்தை ஊதா நிற மெழுகுதிரியைப் பற்றவைப்பார். இவ்வாரம் முழுவதும் பின்வரும் இறைவேண்டுதல் செய்யப்படும். மாட்சி நிறைந்த ஆண்டவரே எம்மிடையே எழுந்து வரும்படியாக உம்மை மன்றாடுகின்றோம். உமது பாதுகாவலினாலும், விடுதலையினாலும் எமது பாவத்தின் அச்சுறுத்தல் அபாயத்திலிருந்து மீட்கப்படுவோம் என்று நம்புகின்றோம். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே உம்மை மன்றாடுகின்றோம், ஆமென்.

திருவருகைக் கால இரண்டாம்; ஞாயிறு குடும்பத்தின் தலைவர் உணவை ஆசீர்வதித்தபின்,  மாட்சி நிறைந்த கடவுளே! உமது ஒரே திருமகனின் வருகைக்காக நாங்கள் எம்மைத் தகுந்த முறையில் ஆயத்தம் செய்யும் படி எங்கள் இதயங்களில் பேரார்வத்தை ஏற்படுத்தியருளும். இதனால் அவருடைய திருவருகையின் வழியாக நாங்கள் தூய இதயத்தோடு உமக்குப் பணிபுரியும் தகுதியைப் பெறுவோம். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென். என்று செபித்தபின் திருவருகைக்கால அலங்கார வளையத்தை ஆசீர்வதிப்பார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தின் மூத்த குழந்தை இரண்டாவது ஊதா நிற மெழுகுதிரியை,  முதல்வார மெழுகுதிரியின் ஒளியிலிருந்து ஒளியைப் பெற்று பற்றவைப்பார்.

திருவருகைக் கால மூன்றாம்; ஞாயிறு குடும்பத்தின் தலைவர் உணவை ஆசீர்வதித்தபின், மாட்சி நிறைந்த கடவுளே! எமது செபத்தை உமது செவிகள் ஆர்வத்துடன் கேட்பதாக. உமது சந்திப்பின் மூலம் வரும் அருளினால் எமது சிந்தையில் கவிந்துள்ள காரிருள் அகற்றப்பட்டு நாங்கள் தெளிவடையச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே உம்மை மன்றாடுகின்றோம். ஆமென். என்று செபித்தபின் திருவருகைக்கால அலங்கார வளையத்தை ஆசீர்வதிப்பார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தின் தாய் மூன்றாவது  றோஸ் நிற மெழுகுதிரியையும் முதல்வார,  இரண்டாம் வார மெழுகுதிரிகளையும் பற்றவைப்பார்.

இறுதியாக திருவருகைக் கால நான்காம்;; ஞாயிறு குடும்பத்தின் தலைவர் உணவை ஆசீர்வதித்தபின்,  மாட்சி நிறைந்த கடவுளே! உமது மாட்சியோடும்,  வல்லமையோடும் எம்மிடையே எழுந்தருளுமாறு உம்மை மன்றாடுகின்றோம். ஏனெனில் உமது வல்மையே எமக்கு உதவியளிக்கும்.  உமது அருளிரக்கத்தினதும், மன்னிப்பினதும் உதவியினால்,  எமது பாவத்தின் விளைவுகள் அனைத்தும் துடைத்தளிக்கப்படும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென். என்று செபித்தபின் திருவருகைக்கால அலங்கார வளையத்தை ஆசீர்வதிப்பார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தின் தந்தை நான்காவது ஊதா நிற மெழுகுதிரியையும்,  ஏனைய மூன்று திரிகளையும் பற்றவைப்பார்.

இந்த நிகழ்வுகள் நமது இதயங்களில் இறை நம்பிக்கையை ஆழப்படுத்தி,  குடும்பங்களில் எப்பொழுதும் விழிப்பாயிருந்து கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் உண்மைத்தன்மையை இழந்துவிடாதிருக்கவும் நமக்கு உதவுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *