மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பணிக்குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.
ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.(மத்.10,28) என்னும் நம் ஆண்டவர் இயேசுவின் வழிகாட்டுதலை தங்கள் சாவின் மூலம் சாதனையாக்கிய நம், மன்னார் மறைசாட்சிகளின் 475 ஆண்டு மறைசாட்சிய மரணத்தை நினைவு கூரும் இவ்வாண்டில், மன்னார் மறைமாவட்டத்தில் 5 இறைபணியாளர்கள் பணிக்குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இது இறைவன் அருட்பணியாளர்களால் நம் மறைமாவட்டத்தை வளப்படுத்துகின்றார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
கடந்த 23.05. 2019 வியாழக்கிழமை கற்கிடந்தகுளம் பங்கின் இசைமாலைத்தாழ்வு புனித பிலிப் நேரியார் ஆலயத்தைச் சேர்ந்த அருட்சகோ.லூர்துநாயகம் ஜெஸ்மன்றாஜ் மறைமாவட்டக் குருவாகவும், காத்தான்குளம் பங்கின் பாலையடிப்புதுக்குளம் புனித செபமாலை மாதா ஆலயத்தைச் சேர்ந்த அருட்சகோ.சந்தியோகு வின்சென்ற் மைக்கல், மற்றும் நானாட்டான் பங்கின் பள்ளங்கோட்டை புனித அந்தோனியார் ஆலயத்தைச் சேர்ந்த அருட்சகோ.வேதநாயகம் அனுசியஸ் ஆகியோர் யாழ் மாகாண அமலமரித்தியாகிகளின் துறவற சபைக் குருக்களாகவும், யோசேவ் வாஸ் நகர் தூய நற்கருணை நாதர் பங்கு ஆலயத்தைச் சேர்ந்த அருட்சகோ.பிரான்சிஸ் மைக்கல் யூட்லஸ் சோமஸ்கன் துறவற சபை அருட்பணியார்களாவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பணிக்குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.
இத்தோடு வங்கலை புனித ஆனாள் பங்கு ஆலயத்தைச் சேர்ந்த அருட்சகோ.யூலியஸ் மில்றாஜ் றெவல் அவர்கள் கடந்த மாதம் கண்டி மறைமாவட்டத்தில் நற்கருணை நாதர் துறவறை சபை அருட்பணியாளராக அருட்பொழிவு செய்யப்பட்டார். இவர் வங்காலைப் பங்கிலிருந்து இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 36வது அருட்பணியாளராவார். இவர் தமது முதல் திருப்பலியை 12.05.2019 வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் நிறைவேற்றினார்.