குருநாகல் மறைமாவட்டத்தின் கல்கமுவ பங்கிலுள்ள மகா கல்கமுவ என்னும் இடத்தில் உள்ள தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று 23.10.2018 செவ்வாய்க்கிழமை மன்னார் மறைமாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம், மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைப் பகுதியான முழங்காவில் பங்கு – மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைப் பகுதியான தேவன்பிட்டிப் பங்கு ஆகியவற்றின் மையப் பகுதியில் மன்னார் சந்குப்பிட்டி பிரதான பாதையில் வைத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.ஜோசவ் ஜெபரெட்ணம் அடிகளார் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களிடம் கையளித்தார்.இத் திருநிகழ்வுக்கான பங்கு ஆயத்தங்கள் அனைத்தையும் பங்குத் தந்தை அருட்பணி.எ.டெனி கலிஸ்ரஸ் அடிகள் மேற்கொண்டிருந்தார். இவ்வேளையில் மடு மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி.ச.சத்தியறாஜ், மாந்தைப் பங்குத் தந்தை அருட்பணி.ச.மரியதாஸ் லீயோன், பறப்பாங்கண்டல் பங்குத் தந்தை அருட்பணி. றஜனிகாந், விடத்தல்தீவுப் பங்குத்தந்தை அருட்பணி.அருட்குமரன், மறைமாவட்ட தூய யோசேவ்வாஸ் பணிக்குழு இயக்குனர் அருட்பணி.க.அருள்பிரகாசம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்தத் திருப்பயணத்தில் கல்கமுவ பங்குத் தந்தை அருட்பணி. ஜானக, மன்றும் அருட்பணி. சுனில் மற்றும் கல்கமுவ பங்கைச் சேர்ந்த ஆண்,பெண் பொதுநிலையினர் என சில பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.
அவ்விடத்திலிருந்து தேவன்பிட்டிப் பங்கின் சிற்றாலயமாகத் திகழும் தூய யோசேவ் வாஸ் சிற்றாலயத்திற்கு மோட்டார் பவனியோடும் பாடசாலை மாணவர்களின் மேலை நாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடும் தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை அழைத்து வரப்பட்டு இங்கு ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி இடம் பெற்றது. இத் திருச் சிலுவை வைக்கப்பட்ட சில இடங்களில் நடைபெற்ற அசாதாரண நிகழ்வுகளை இத் திருப்பயணத்தில் இணைந்து செல்லும் அருட்பணியாளர்கள் ஆதாரத்தோடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது.