இன்று நாம் செபிக்கும் திருச்செபமாலையின் ஒழுங்கு வடிவம் 1214ம் ஆண்டில் திருச்சபைக்கு கிடைத்த ஒரு உயரிய சொத்தாகும். இவ் வடிவம் தூய டோமினிக் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டதாகும். தூய டோமினிக் இதனை தூய கன்னிமரியாளிடமிரு ந்து பெற்றுக் கொண்டார். 12ம் 13ம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலே, துல்லூஸ் என்னும் இடத்திற்கு அருகாமையில் திருச்சபையின் திருவருட்சாதனங்களுக்கு எதிராகவும், திருச்சபையின் விசுவாசக் கோட்பாடுகளுக்கு எதிராகவும், விண்ணகம் – நரகம் – ஒழுக்க நெறிகள் இல்லை ஆகவே விபச்சாராம், பலதாரத் திருமணம், தற்கொலை என்பவை ஏற்றுக் கொள்ளக் கூடியவையே என்று அல்பிஜென்சியன்ஸ் என்னும் சிறிஸ்தவப் பிரிவினர் தவறான கருத்துக்களைப் பரப்பி வந்தனர். இதனை எதிர்த்து பல கருத்துக்களை வெளியிட்டு திருச்சபையை வலுப்படுத்தவும், இவர்களின் மன மாற்றத்திற்காகவும் புனித டோமினிக் முயன்று வந்தார். அதே வேளையில் அல்பிஜென்சியன்ஸ் என்ற பிரிவினருடைய மனமாற்றத்திற்கு மக்களின் முன்னுதாரணமற்ற வாழ்க்கை தடையாக இருப்பதையும் உணர்ந்த தூய டோமினிக் பிரான்ஸ் நாட்டிலுள்ள துல்லூஸ் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதிக்குச் சென்று மூன்று இரவும், மூன்று பகலும் தன் உடலை மிக மிகக் கடினமாக வருத்தி உணவோ, நீரோ எதுவுமின்றி நோன்பிருந்து தவம் செய்தார். அவருடைய தவம் எப்படியான தெனில் அவர் மயக்கமுற்று சுய நினைவை. இழக்கும் அளவிற்குச் சென்றது. அவர் சுயநினைவிழந்து கீழே விழுந்து கிடந்த போது தான் அன்னைமரியாள் அவருக்குத் தோன்றி திருச்செபமாலை செபிப்பதன் வழியாகவே இந்த தவறான கொள்கையினை வேரறுக்க முடியும் என்னும் செய்தியைக் கொடுத்தார். திருச்செபமாலை செபிக்கும் முறையையையும் சொல்லிக் கொடுத்தார்.
இவ்வேளையில் அன்னை மரியாள் மூன்று வானதூதர்களோடு தோன்றி “என் அருமை டோமினிக், உலகை மாற்றியமைக்க என்ன வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென தூய மூவொரு கடவுள் விரும்புகின்றார் என்பது உமக்குத் தெரியுமா? என்று கேட்டார். அதற்கு தூய டோமினிக்“ அன்புத் தாயே எனது முயற்சிகளைவிட உமது அறிவும், ஞானமும் மேலானது. உமக்கு எல்லாம் தெரியுமே. ஏனெனில் உமது திருமகனாருக்கு அருகிலே மீட்பின் முக்கியமான கருவியாக இருக்கின்றீர்கள். என்று மறுமொழி பகர்ந்தார். அதன்பின் அன்னை மரியாள் “நீ ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகின்றேன்“. இப்பொழுது நிலவும் இவ்வாறான முரண் பாடுகள் நிறைந்த சூழமைவுகளிலே, புதிய ஏற்பாட்டின் அத்திவாரக்கல் போன்று அமைகின்ற வானதூதரின் திருப்பாடல் என அழைக்கப்படும். “அருள் நிறை மரியே“ என்னும் வார்த்தைகளைப் பற்றி மறையுரை ஆற்றுவதன் வழியாக கடின இதயங் களை இழகச் செய்து ஆன்மாக்களை ஆதாயமாக்கிக் கொள்ளலாம்“ என்னும் செய்தியைக் கொடுத்தார். எழுந்து ஆறுதலும், பலமும், தெளிவும், புதிய நம்பிக்கையும் பெற்ற தூய டோமினிக் மக்களின் மனமாற்றத்திற்காக சுவாலையாக உள்ளத்தில் பற்றி யெரியும் ஆன்மீக தாகத்தோடும், வேட்கையோடும் அங்குள்ள பேராலயத்தை நோக்கி நடந்தார். அப்பொழுது யாருடைய பார்வைக்குள்ளும்; தென்படாத வான தூதர்கள் பேராலயத்தின் மணியை ஒலிக்கச் செய்து மக்களை ஒன்று கூட்டினார். உடனே வானதூதரின் திருப்பாடல் என்று அன்னை மரியாள் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்துச் சொன்ன இறைவார்த்தையை மையமாக வைத்து மறையுரை ஆற்றத் தொடங்கினார். அவருடைய மறையுரையின் ஆரம்பத்திலேயே அனைவருக்கும் அச்சத்தை உருவாக்கும் அளவிற்கு பலத்த காற்று வீசியது. நிலம் நடுங்கியது
சூரியன் இருளாகியது, பலமான இடி இடிக்கத் தொடங்கியது. கண்களைக் கூசச் செய்யும் அளவுக்கு மின்னல் மின்னியது.
இதனைவிட மேலான அச்சம் என்னவென்றால் அப் பேராலயத்தின் முக்கிய இடமொன்றில் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாளின் திருவுருவம் மூன்று முறை விண்ணைநோக்கி அதன் கைகளை உயர்த்தி, அம்மக்கள் தம் தீய வழிகளிலிருந்து மனம் மாறாவிட்டால் கடவுளின் கோபம் அவர்கள் மீது வரும் என்பதையும் எடுத்துக் கூறியது. இறுதியில் தூய டோமினிக்கின் செபம் முடிவுற்றதும் புயற்காற்றும், ஏனைய அச்சமூட்டும் நிகழ்வுகளும் தணிந்து போயின. தொடர்ந்து திருச்செபமாலை பற்றி மறையுரையாற்றிக் கொண்டிருந்தார். அதனுடைய முக்கியத்துவம், இயல்பு, சக்தி, ஆன்மீகச் செழுமை பற்றியெல்லாம் பேசி முடிந்தபின் அங்கிருந்த தூல்லூஸ் பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தங்களது போலியான விசுவாச வாழ்வைக் களைந்து விட்டு புதிய வாழ்வைத் தொடங்கினர். இன்னும் சில வாரங்களின் பின் அப் பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க மக்களின் ஆன்மீக வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்றேற்றம் காணப்பட்டது. முழுமையான கிறிஸ்தவ வாழ்வை அவர்கள் வாழத் தொடங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து தூய டோமினிக் தனது எஞ்சிய வாழ்நாளெல்லாம் திருச்செப மாலை பற்றி மறையுரையாற்றிக் கொண்டேயிருந்தார். தூய ஆவியால் வலுவூட்டமும் இறையூக்கமும் பெற்று, அன்னை மரியாளால் அறிவுறுத்தப்பட்டு, தனது சொந்த அனுபவத்தினால் கிடைத்த தெளிவுகளோடு அவர் இப்பணியைச் செய்து கொண்டேயி ருந்தார். ஒருநாள் தூய டோமினிக் பிரான்ஸ் நாட்டினுள் பரிஸ் நகரிலுள்ள அன்னை மரியாளின் பேராலயத்தில் (ழேவசந னுயஅந) நற்செய்தியாளர் தூய யோவானுடைய திருவிழா அன்று மறையுரை ஆற்ற அழைக்கப்பட்டிருந்தார். திருப்பலிக்கு முன்பதாக அப்பேராலயத்தின் திருப்பலிப்பீடத்திற்குப் பின்புறமாகவுள்ள சிற்றாலயத்திலே வழமையாகச் செய்வது போல செபமாலை செபித்துக்கொண்டு தனது மறையுரை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அன்னை மரியாள் அவருக்குத் தோன்றி “டோமினிக், இன்று மறையுரையாற்ற நீர் தயாரித்து வைத்திருக்கும் விடயங்கள் மிகவும் நல்லவையாக இருக்கலாம். ஆனால் இன்று இதை விட மேலான ஒரு மறையுரையை நான் உனக்காக கொண்டுவந்துள்ளேன்“ என்றார்.
உடனே தூய டோமினிக் அதனைப்பெற்று முழுவதையும் மிகுந்த கவனத்தோடு வாசித்து,தியானித்து, புரிந்து கொண்டு அன்னை மரியாளுக்கு நன்றி கூறினார். அதன்பின் வானத்து அரசியான அன்னை மரியாள் கொடுத்த அற்புதமான மறையுரை வழங்கினார். இறையியலாளர்களும், வேறு பல முக்கியமானவர்களும் பங்கேற்ற அத்திருப்பலியில் இவருடைய மறையுரை மிகவும் கவர்ச்சிகமானதும், அர்த்தம் நிறைந்ததாகவும் அமைந்தது. திருச்செபமாலை பற்றிய அவருடைய மறையுரையிலே அருள் நிறைமரியே என்னும் இறைவார்த்தைச் செபத்தை ஒவ்வொரு சொல்லாக விளக்கி வந்தார்.
இவருடைய பணி ஓய்வின் பின்னர் இவருடைய “டோமினிக்கன்“ சபையைச் சார்ந்த அருளாளர் அலன் டீலா றோச் என்பவர் செபமா லையைப் பற்றிய ஆன்மீகப் போதனைகளை முன்னெடுத்துச் சென்றார். 1349ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளின்மீது கடவுளின் கோபம் மூண்டெழுந்தது. என்றுமே இல்லாதவாறு தொற்றுநோய் பரவி பல, இழப்புக்களை ஏற்படுத்தியது. ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியில் தோற்றம் பெற்ற இந்தத் தொற்றுநோயின் தாக்கம் இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், போலண்ட், கங்கேரி போன்ற நாடுகளுக்கும் பாதிப்பைக் கொடுத்தது. இவ்வேளையில் அன்னை மரியாள் அருளாளர் அலன் டீலா றோச்சுக்குத் தோன்றி திருச்செபமாலைப் பணியைத் தொடர்ந்து முன்னெடுக்கும்படி கூறினார். இதன்பின் அலன் அவர்கள் ஆண்டவரிடம் இருந்து பெற்ற ஒரு எச்சரிக்கையோடு 1460ம் ஆண்டில் மீளவும் இப்பணியைத் தொடர்ந்தார்.
ஆசாரத்திற்குரிய அலன் டீலா றோச் ஒருநாள் திருப்பலி ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, திருஅப்பத்திலிருந்து இயேசுவின் குரல் கேட்டது. அப்போது இயேசு அவருடன் உரையாடினார். “திருச்செபமாலை பற்றி மறையுரை ஆற்றும்படி அவரிடம் கேட்டார்“ என்னை இவ்வளவு விரைவாக ஏன் சிலுவையில் அறைகின்றாய்“ என்று கேட்டபோது அலன் அவர்கள் மிகுந்த அச்சத்தோடு “ஆண்டவரே நீர் என்ன சொல்லுகின்றீர்“ என்றார். ஞானத்தையும், ஆற்றலையும் நிறைவாகப் பெற்றிருந்தும், நீ என் அன்னையின் திருச் செபமாலையபை; பற்றி மறையுரையாற்றுவதில்லை. நீ இதனைச் செய்தால் மட்டுமே பல மக்களுக்கு அறிவூட்டி, ஆற்றுப்படுத்தி அவர்களை சரியான பாதையில் வழிநடாத்தி, பாவ வாழ்விலிருந்து அவர்களை விடுவிக்கலாம். ஆனால் அதனைச் செய்யவில்லை. ஆதலால் அவர்களுடைய பாவங்களுக்கு நீயே பொறுப்பு“ என்றார். இதனால் விழிப்படைந்த ஆன் அலன் இடைவிடாமல் திருச்செப மாலை பற்றி போதனை செய்து கொண்டேயிருந்தார்.
குறிப்பாக திருச்செபமாலைக்கு இயேசுவினதும் மரியாளினதும் திருப்பாடல் என்றதொரு பெயரும் உண்டு. நாம் தற்போது பயன்படுத்தும் செபமாலையின் வடிவம் திருச்சபையின் ஆரம்பகால வழிபாட்டு முறையிலிருந்து பெறப்பட்டதாகும். ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஜஸ்ரிஸ் பகுதியைச் சேர்ந்த துறவிகள் தமது ஆச்சிரமத்திலே திருவிவிலியத்திலுள்ள 150 திருப்பாடல்களையும் தங்களுடைய செபத்தின் முக்கிய பகுதியாகக் கொண்டிருந்தனர். அவர்கள் அதனைச் செபித்த முறையும், அதன் தியானப் போக்கும் அவ் ஆச்சிரமத்திற்கு அருகிலிந்த மக்களையும் மிகவும் கவர்ந்தது. அதனால் அந்தத் துறவிகளோடிணைந்து தாங்களும் அத்திருப்பாடல்களைச் செபிக்க பேராவல் கொண்டனர்.
ஆனால் அவர்களுடைய இப் பேரார்வம் சாத்தியப்படவில்லை. ஏனெனில் அவர்களால் திருப்பாடல்களை மனப்பாடம் செய்து நினைவில் வைத்திருக்க முடியவில்லை. அத்தோடு திருப்பாடல்களின் அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட பிரதிகளோ இருக்க வில்லை. மக்களின் இந்த பேரார்வத்திற்கு ஏமாற்றம் அளிக்காத முறையிலே 150 திருப்பாடல்களுக்குப் பதிலாக “பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே“ என்னும் செபத்தைச் சொல்லும்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. காலவோட்டத்தில் இது மிகவும் பிரபல்யம் அடைந்தது.
முதலில் 150 சிறிய மணிகளை சிறய தோலுறையிலிட்டு 150 பரலோக மந்தித்தையும் எண்ணிச் சொல்லுவதற்குப் பயன்படுத்தினர். ஆனால் இது நடைமுறைக்கு சிறிது கடினமாயிருந்தது. சிறிய நூல் ஒன்றை எடுத்து அதில் 50 முடிச்சுக்களைப் போட்டு மூன்று முறை சொல்லி 150 பரலோக மந்திரத்தை செபித்தனர். பின்னர் சிறிய மரத்துண்டுகளால்; இதனை உருவாக்கினர். திருச் செபமாலை மேலும் 1500ம் ஆண்டுகளிலே மிகவும் பிரபல்யமானது. இக்காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பா ஆட்சியுரிமை இழந்து நின்ற போது திருச்செபமாலை புதிய சக்தியைக் கொடுத்தது. 1433ம் ஆண்டில் கொன்ஸ்தாந்திநோபிள் அரசனின் ஆட்சி முஸ்லிம் படையெடுப்பால் சிதைக்கப்பட்டபோது கிறிஸ்தவம் பல்வேறு சவால்களுக்கு உள்ளானது. இந்த நிலை ஏனைய கிறிஸ்தவ நாடுகளையும் ஆழ்ந்து சிந்திக்கவைத்தது.