பொதுக்காலம், வாரம் 21 – திங்கள்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5, 11-12

நம் தந்தையாகிய கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உரிய தெசலோனிக்கத் திருச்சபைக்குப் பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! சகோதரர் சகோதரிகளே! உங்கள் பொருட்டுக் கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஓங்கி வளருகின்றது; நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு பெருகி வழிகிறது. ஆகவேதான் நாங்கள் கடவுளின் சபைகளில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறோம்; உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும் நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம். இவை, கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவை அனத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதி உள்ளவர்கள் ஆவீர்கள். இந்த ஆட்சிக்காகவே நீங்கள் துன்புறுகிறீர்கள். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவர் ஆக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக! இவ்வாறு நம் கடவுளும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும், அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 96: 1-2. 2-3. 4-5

பல்லவி: ஆண்டவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். பல்லவி

அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி

ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்;
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.
மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே;
ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 13-22

அக்காலத்தில் இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை. வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களை விட இரு மடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள். குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா? யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா? எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன் மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார். திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார். வானத்தின்மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.