ஆன்மிக வாசனையும், அமைதித் தென்றலும் வீசும் மருதமடுத் திருப்பதியில் வீற்றிருக்கும் மடுத்தாயாரின் விண்ணேற்புப் பெருவிழா கடந்த 15ந் திகதி (15.08.2018) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. மொழி, இனம், மதம் என்ற எல்லைகளைக் கடந்து மக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலுமிருந்து இத் திருவிழாவிற்குவருகை தந்திருந்தனர்.
சுமார் ஏழு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்த அந்த நிலையைப் பார்த்த போது உறவின் சங்கமப் பூமியாக மடுத்திருப்பதி காட்சியளித்தது. மடுமாதா அன்பின் தாயாக அருள் பாலித்துக் கொண்டிருந்த நிலையும் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.
கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் பேராயர் அதி மேன்மை மிகு கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டைகையின் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை வழிநடாத்த, யாழ்ப்பாணம்; மறைமாவட்ட இளைப்பாறிய ஆயர் பேரருட்கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்கலாநிதி அந்தனி ஜெயக்கொடி ஆண்டகை, காலி; மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி றேய்மன்ட் விக்ரமசிங்க ஆண்டகை, குருநாகல்; மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி கரல்ட் அந்தனி ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோபேட் அண்றாடி ஆண்டகை ஆகியோர் அவர்களோடு முதன்மை திருப்பலி நிறைவேற்றுனர்களாக இணைந்து கொண்டனர். இவர்களோடு பெருந்தொகையான அருட்பணியாளர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
சிறப்பாக இத் திருவிழாவிற்கு இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் முதன்மை அமைச்சர் மேன்மைமிகு றணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்டார். திருவழிபாட்டின் முடிவில் தமது உரையில் மடுத்திருத்லம் அமைதியின் திருத்தலமாகவும், அனைவரையும் இணைத்து வைக்கும் திருத் தலமாகவும் இருக்கின்றதெனக் கூறினார்.
பெருந்தொகையான துறவிகளும் நாடாழுமன்ற, மாகாண, உள்ளுராட்சி உறுப்பினர்களும், அரச, அரச சார்பற்ற உயர் பணிநிலை பணியாளர்களும் பக்தர்களும் இத் திருவிழாவிற்கு வருகை தந்திருந்தனர்.
திருப்பலி முடிவில் அன்னையின் திருவுருவப் பவனியும், திருவுருவ ஆசீரும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மன்னார் ஆயர் மடுத்திருத்தலத்திற்கான புதிய பரிபாலகராக அருட்பணி.ச.ஜொய்சி பெப்பி சோசை அடிகளாரை அறிவித்தார். அத்தோடு இதுவரை காலமாகச் சிறப்பாகப் பணியாற்றிய அருட்பணி ச.எமிலியானுஸ்பிள்ளை அடிகளாருக்கு ஆயர் அவர்கள் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தார்.