மருதமடுத் திருப்பதியில் முன்னர் திருக்குடும்ப அருட் சகோதரிகள் குடியிருந்து பணியாற்றிய இல்லம் போரின் தாக்கத்தினால் அழிவுற்றிருந்தது. இந் நிலையில் அவ்விடத்தில் புதிய அழகிய இல்லமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லத்தை இன்று வியாழக்கிழமை மாலை (09.08.2018) மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் ஆசீர்வதித்துத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, மடுப்பதிருப்பதியின் தற்போதைய பரிபாலகர் அருட்பணி. ச.எமிலியானுஸ்பிள்ளை, மருதமடுத் திருப்பதிக்கான புதிய பரிபாலகர் அருட்பணி ச.ஜொய்சி பெப்பி சோசை அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மருதமடுத் திருத் தாயாரின் திருத்தலத்திற்கு வரும் அருட்சகோதரிகள் தங்கிச் செல்வதற்கான வசதிகளோடு இவ் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. திருக்குடும்பக் கன்னியர் அருட்சகோதரிகள் மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை, வங்காலை ஆகிய பங்குகளில் பல ஆண்டுகளாக செய்து வந்த பணியை அண்மைக் காலங்களில் நிறுத்திக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக மருதமடுத் திருத் தாயாரின் திருத்தலத்தில் ஆற்றிவந்த தங்களுடைய பணியையும் நிறுத்தியுள்ளனர். எனவே இவ் இல்லத்தில் தங்கியிருந்து பணியாற்றும் பொறுப்பை வெகு விரைவில் வேறொரு அருட்சகோதரிகளின் சபையினர் ஏற்கவுள்ளனர்.