இலங்கை வாழ் மக்களால் ஆழமாக அன்பு செய்யப்படுகின்ற மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி மாதத்(அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா) திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் இன்று 06.08.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின.இன்று மாலை 06.00 மணிக்கு ஆலய முகமண்டபத்திற்கு முன்பாக தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெற்ற இறைவழிபாட்டைத் தொடர்ந்து திருத் தந்தையின் கொடியை தற்போதைய மடுத் திருப்பதிப் பரிபாலகர் அருட்பணி ச.எமிலியானுஸ் பிள்ளை அடிகளாரும், மடுமாதா கொடியினை மடுத்திருத்தலத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பரிபாலகர் அருட்பணி ச.ஜொய்சி பெப்பி சோசை அடிகளாரும் இலங்கைக் கத்தோலிக்க திருச்சபையின் கொடியினை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் மறையுரைக்காக வந்திருக்கின்ற குருக்களும் ஏற்றி வைத்தனர்.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலர் மதிப்புக்குரிய திரு.மோகன்ராஸ் அவர்களும், மடுப் பிரதேச செயலர் திரு.ஜெயகரன் அவர்களும், பல்தறை சார்ந்த பல அரச பணியாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர். அத்தோடு பல குருக்கள் துறவிகளும், பெருந் தொகையான பக்தர்களும் ஒன்று கூடியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் திருச் செபமாலையும், மறையுரையும், நற்கருணை ஆசீரும் இடம் பெற்றன. திருவிழாவுக்கானதும், திருப்பயணிகளுக்கானதுமான பல்வேறுவிதமான அனைத்து ஒழுங்குகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
இம் மாதம் 14ம் திகதி வேஸ்பர் என அழைக்கப்படும் மாலைப் புகழ் ஆராதனையும், 15ம் திகதி காலை அன்னையின் திருவிழாத் திருப்பலியும், திருவுருவப் பவனியும், திருவுருவ ஆசீரும் இடம் பெறும்.