செட்டிகுளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமைந்துள்ள பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா இன்று 05.08.2018 ஞாயிற்றுக் கிழமை காலையில் நடைபெற்றது. முதன் முதலாக இத்திருத்தலத்திற்கு அருட்பணிக்காக வருகை தந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களை: அருட்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் பாரம்பரிய முறையில் வரவேற்றதோடு, ஆயர் அவர்கள் பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக்கருவிகளின் மகிழ்வொலியோடு அழைத்து வரப்பட்டார். இதன் பின் திருப்பலி ஆரம்பமாகியது.
இத்திருவிழாத் திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை, வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி ச.இராஜநாயகம், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி லீ.சுரேந்திரன் றெவல் ஆகியோரோடு பல குருக்கள் கலந்து கொண்டனர்.
பல துறவிகள், பெருந்தொகையான இறைமக்கள், அரச, அரச சார்பற்ற பணியாளர்கள் பலர் இத்திருவிழாத் திருப்பலியில் கலந்து செபித்தனர். பங்குத் தந்தை அருட்பணி இ.செமாலை அடிகளார் பங்குச் சமூகத்தோடு இணைந்து திருவிழா ஒழுங்குகளை மேற் கொண்டிருந்தார். இத்திருவிழா அரச வர்த்தமானியில் அரச அனுசரணை பெறும் திருவிழாவாகப் பிரகடனப் படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.