பொதுக்காலம் 16 வாரம் வியாழன்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-3,7-8,12-13

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: “நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலை நிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன். இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள் மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர். செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்கு உள்ளாக்கினீர்கள். குருக்கள், `ஆண்டவர் எங்கே?’ என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர். வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் :திபா 36: 5-6 7-8. 9-10

பல்லவி: ஆண்டவரே, வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது.

ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு; முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை.
ஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை. பல்லவி

கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது!
மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.
உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்;
உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். பல்லவி

ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது;
உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.
உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும்,
நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவின் அருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: `நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’ உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *