மன்னார் மறைமாவட்டத்தின் 45வது பங்கு இன்று 11.07.2018 புதன் கிழமை உதயமாகியுள்ளது. இது வரை காலமும் சிலாவத்துறைப் பங்கின் அருட்பணி எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த முள்ளிக்குளம், காயாக்குளி, மன்னார் புத்தளம் எல்லையில் அமைந்துள்ள பூக்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக முள்ளிக்குளம் தூய பரலோக மாதா பங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் முள்ளிக்குளம் வருகைதந்து புதிய பங்கைப் பிரகடனப்படுத்தி, இப் பங்கின் முதல் பங்குத் தந்தையாக அருட்பணி.பீ.லோறன்ஸ் லீயோன் அடிகளாரை கத்தோலிக்க திருச்சபையின் மரபுக்கொப்ப நியமனம் செய்து நன்றித் திருப்பலியை நிறைவேற்றினார்.
இப் பங்கிற்கு வருகை தந்த ஆயரையும், புதிய பங்குத் தந்தையையும் பங்கின் நுழைவாயில் கிராமமான காயக்குளி பிரதான வீதியில் வைத்து இக்கிராம மக்கள் வரவேற்பளித்த பின்னர் உந்துருளிப் பவனியாக முள்ளிக்களம் வரை அழைத்துச் சென்றனர். பின் பாடசாலை மாணவர்களின் இன்னியம் மகிழ்வொலியோடு ஆலய முன்றல் வரை வரவேற்பளித்தபின்னர், இக்கிராமத்தில் கலைஞர்கள் கவிபாடி அழைத்துச் சென்றனர். அதன் பின் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
குருக்கள், துறவிகள், இறைமக்கள், அரச, அரச சார்பற்ற முதன்மைப் பணிநிலை பணியாளர்கள் எனப் பலரும் கலந்த கொண்டனர்.