பொதுக்காலம் 12 வாரம் திங்கள்

முதல் வாசகம்

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 17: 5-8,13-15,18

அந்நாள்களில் அசீரியா மன்னன், நாடு முழுவதன் மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான். ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான். ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர். மேலும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும், இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின் படியும் நடந்து வந்தனர். ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள். ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்; ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்; வேற்றினத் தாரைப் பின்பற்றலாகாது என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர். எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 60: 1. 2-3. 10-12

பல்லவி: எங்களுக்குத் துணை செய்யும் ஆண்டவரே, எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!

கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்;
எங்களை நொறுக்கிவிட்டீர்;
எங்கள்மீது சீற்றம் கொண்டீர்;
இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும். பல்லவி

நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்;
அதன் வெடிப்புகளைச் சீர்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது;
உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்;
மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். பல்லவி

கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ!
கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ!
எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;
மனிதர் தரும் உதவியோ வீண்.
கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்;
அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், `உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *