சிறுக்கண்டல் தூய அந்தோனியார் பங்குச் சமூகம் மன்னார் தங்களது பங்கிற்கு முதல் தடவையாக வருகை தந்த ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு நேற்று 10.06.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பான வரவேற்பை அளித்தது.நேற்று மாலை முருங்கன் சந்தியிலிருந்து மண்ணின் யதார்த்தங்களோடிணைந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. உழவு இயந்திரங்கள், முச்சக்கர வண்டிகள்,உந்துருளிகள், மாட்டு வண்டி ஆகியவை அணிவகுத்து வர ஆயர் அவர்கள் ஆலய முன் பகுதிவரை அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து பரிகாரிகண்டல் பாடசாலை மாணவர்களின் இன்னியம் வாத்தியக்கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயர் அவர்கள் ஆலய வளவின் பிரதான நுழைவாயில் வரை அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து ஆலயத்தின் பிரதான நுழைவாயில் வரை பங்கின் நாடகக் கலைஞர்கள் கவிபாடி ஆயரை அழைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பலியும் அதன் இறுதியில் ஆயருக்காக நன்றி வெளிப்பாட்டு நிகழ்வும் நடைபெற்றது. பங்குத் தந்தை அருட்பணி எமில் எழில்றாஜ் அடிகளார் பங்கு அருட்பணிப் பேரவையோடு இணைந்து அனைத்தையும் சிறப்பாக ஒழுங்கமைப்புச் செய்திருந்தார்.