கிளறீசியன் மறைபரப்பு துறவற சபையின் குருவாகிய அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்களின் இரண்டாவது படைப்பான Reconciliation and Peacebuilding in Post-war Sri Lanka: through the Healing of Memories and the Role of the Catholic Church ( கசப்பான நினைவுகளைக் குணமாக்குவதன் வழியாக இலங்கையில் போருக்குப் பின்னரான ஒப்புரவும், சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும்: இந்த வழிமுறையில் கத்தோலிக்க திருச்சபையின் வகிபாகம்) என்னும் ஆங்கில நூல் கிளறீசியன் பதிப்பக வெளியீடாக 02.06.2018 சனிக்கிழமை கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.ஏற்கனவே 2016ம் ஆண்டில் அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்கள் Look at the Lilies of the Field: Musings of the Heart.. என்னும் படைப்பினையும் வெளிக்கொணர்ந்துள்ளார். தற்போது போரினால் பாதிக்கப்பட்டுவர்களுக்கான மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியாவில் அமைந்துள்ள VAROD புனர்வாழ்வு மையத்தில் பணியாற்றுவதோடு, வவுனியாவில் பணியாற்றும் கிளறீசியன் அருட்பணியாளர் குழுமத்தின் குழு முதல்வராகவும் பணியாற்றுகின்றார். இவர் சிக்காக்கோ கத்தோலிக்க இறையியல் பல்கலைக்கழகத்தில் நடைமுறைச் சாத்திய இறையியல் துறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இவருடைய இந்தப் புத்தக வெளியீட்டிற்கு முதன்மை விருந்தினராக இலங்கைக்கான திருத் தந்தையின் பிரதிநிதி அதி மேன்மைமிகு கலாநிதி பியர் நுயென் வான் ரொற் அவர்கள் கலந்து சிறப்பித்தார். நூலுக்கான அறிமுக உரையை இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் கலாநிதி ஜெகான் பெரேரா வழங்க, நூல் ஆய்வினை கொழும்பு களனியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரன்லி விஜயசிங்க முன்வைத்தார். இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேரருட் கலாநிதி வின்ஸ்ரன் பெனாண்டோ ஆண்டகை நூலாசிரியருக்கு சிறப்புச் செய்தியொன்றினை அனுப்பிவைத்தார்.
பேராசிரியர் ஸ்ரன்லி விஜயசிங்க தனது நூல் ஆய்வுரையில் : இந்தப் புத்தகமானது கிறிஸ்தவர்களுக்கும் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபைக்கும் தாக்குமானதும், ஆக்கபூர்வமானதுமான நடைமுறைச் சாத்தியங்களை முன் வைத்திருக்கின்றது. என்பதோடு நூலாசிரியரின் இந்த அற்புதமான பணிக்காக அவரை வெகுவாகப் பாராட்டினார்.
இந்நிகழ்வுக்கு அமைச்சர்கள், இலங்கைக் கத்தோலிக்க துறவற சபைகளின் மேலாளர், கிளறிசியன் சபை ஆண், பெண் துறவிகள், அருட்பணி ஜோசவ் ஜெயசீலன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், பெருந்தொகையான குருக்கள், துறவிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Congratulations fr. I need this book, where do we buy this book fr? Thank you