உலகெங்கும் பரந்து வாழும் கத்தோலிக்க திருச்சபை நேற்றைய நாளில் (03.06.2018 ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவை மிகவும் ஆன்மிக அர்த்தத்தோடு நினைவு கூர்ந்து கொண்டாடிய அதே வேளை மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்துப் பங்குகளிலும் இப் பெருவிழா மிகவும் ஆன்மிகச் செழுமையோடு கொண்டாடப்பட்டது.இந் நாளில் பல இடங்களிலும் சிறுவர்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்டது. அத்தோடு சில பங்குகளில் நற்கருணைப் பேரணியும் ஆன்மிக அருள் நிலையோடு முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
நேற்று மாலை (03.06.2018 ஞாயிற்றுக்கிழமை) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்குச் சமூகம் சிறப்பானதொரு நற்கருணைப் பேரணியை ஒழுங்கு செய்திருந்தது. நேற்று மாலை 04.30 மணிக்கு மன்னார் தூய மரியன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியோடு இப் பேரணி ஆரம்பமாகியது. அருட்பணி ச.பிரான்சிஸ் மரி டிக்கோல் அடிகளாரின் தலைமையில் திருப்பலி நடைபெற்று அதன்பின் சிறிய நற்கருணைப் புகழ் ஆராதனையுடன் பவனி ஆரம்பமானது. சிறப்பாக மெருகூட்டப்பட்ட இயந்திர ஊர்தியிலே நற்கருணை நாதர் அரியணை அமர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டார்.
இப்பவனி மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி வழியாக, மன்னார் வைத்தியசாலை சந்திலை வந்தடைந்து அற்கிருந்து கடலேரி வீதி வழியாக மன்னார் தொலைத் தொடர்பு மையத்தை வந்தடைந்து அதற்கு எதிர்ப்புறமாக அமைக்கப்பட்ட தற்காலிக சிறப்புபு; பீடத்திலே நற்கருணை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் மீண்டும், மன்னார் தூய செபஸ்தியார் பேராலய வீதி வழியாக பேராலயத்தை வந்தடைந்து அங்கு நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. அருட்பணி ச.தேவறாஜா கொடுதோர் அடிகள் நற்கருணை ஆசீரை வழங்கினார். பங்குத் தந்தை அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளார் அங்கு பணியாற்றும் ஏனைய அருட்பணியாளர்களோடும், துறவிகளோடும், பங்கின் பல்வேறு பணிக்குழக்களின் பங்களிப்போடும் இப் பேரணியை சிறப்பாக ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச் சென்றார்.