இளையோரோடு, இளையோருக்காக

2019ம் ஆண்டு தை மாதம் 22ம் திகதி தொடக்கம் 27ந் திகதி வரை கோஸ்ரா றிக்கா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பனாமா நாட்டில் நடைபெறவுள்ள உலக கத்தோலிக்க இளைஞர் ஒன்று கூடலுக்கு ஆயத்தமாக இவ்வாண்டு இறுதியில் வத்திக்கானில் நடைபெறவுள்ள ஆயர் மாமன்றத்தின் ஒன்று கூடலில் கலந்துரையாடப்படவேண்டிய விடயங்களை பெற்றுக் கொள்வதற்காக உலகமெங்கும் உள்ள மறைமாவட்டங்களில் நடைபெற்று வரும் ஒன்று கூடலின் ஒரு நிலையாக இளைஞர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மன்னார் மறைமாவட்டத்தில் பணி புரியும் இளைஞர் பணிக்கான தூய டொன்பொஸ்கோவின் சலேசியன் சபை அருட்பணியாளர்கள் இன்று 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாள்முழுவதும் முருங்கனில் உள்ள தூய டொன் பொஸ்கோ தொழில் நுட்பக் கல்லூரியில் மன்னார் மறைமாவட்ட இளைஞர்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்களை இளையோரோடு, இளையோருக்காக என்னும் சிந்தனைக் கருத்தோடு முன்னெடுத்துச் சென்றனர்.

மறைமாவட்டதின் பல்வேறு பங்குகளிலுமிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களும், இளம் பெண்களும் இந் நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இந் நிகழ்வில் ஏனைய சமயங்களைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. இன்றைய காலை நிகழ்வுகளை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார் ஆரம்பித்து வைத்தார்.

மாலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ல.பி.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் இந் நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பித்தார். இந் நிகழ்வுக்கு வருகை தந்த ஆயரை தூய டொன்பொஸ்கோவின் சலேசியன் அருட்பணியாளர்களின் முருங்கன் தொழில் நுட்பக் கல்லூரி அதிபரும், குழுத் தலைவருமான அருட்பணி போல் அடிகளாரும், ஏனைய குருக்களும், அங்கு தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களும் வரவேற்க, மன்/ பரிகாரிகண்டல் மகாவித்தியாலய மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டு இன்னிய வாத்திய மகிழ்வொலியோடு அழைத்துச் செல்ல நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைத்து இளைஞர்களும, இளம் பெண்களும் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்வையும் பாசத்தையும் தெரிவித்து ஆயர் தந்தையை வரவேற்றனர்.

பல்சுவை அம்சங்களைக் கொண்டிருந்த இந் நிகழ்வின் இறுதியில் ஆயர் மாமன்ற கலந்துரையாடலுக்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்த வினாக்கள் இளைஞர்களால் கலந்துரையாடப்பட்டு அதன் அடிப்படையில் எழுந்த கருத்துக்கள் கோவையாக்கப்பட்டு ஆயர் மாமன்றத்திற்கு அனுப்புவதற்காக மன்னார் ஆயரிடம் இளைஞர்கள் சார்பில் மன்னார் மறைமாவட்ட இளைஞர் ஒன்றியத் தலைவர் செல்வன் டன்ஸ்ரன் அவர்கள் கையளித்தார். இறுதியாக ஆயர் ஆசியுரை கூறி , நடைபெற்ற கலை பண்பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசினை வழங்கி , தனது ஆசீரையும் வழங்கினார்.

அருட்பணி போல் தலைமையிலான தூய டொன்பொஸ்கோவின் சலோசியன் சபை அருட்பணியாளர்கள் இந் நிகழ்வை மிகவும் அர்த்தமுள்ள, பயனுள்ள விதத்தில் ஒழுங்குபடுத்தி நடாத்தியது பாராட்டப்படவேண்டியதொன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *