சிலாவத்துறை தூய சவோரியார் பங்குச் சமுகம் இன்று 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை காலை தங்கள் பங்கிற்கு முதன் முதலாக வருகைதந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ல.பி.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை அன்போடு வரவேற்றனர்.இன்று காலை தங்களது பங்கிற்க வருகை தந்த ஆயரை உந்துருளிப் பவனியோடு ஆலயத்தின் முன்னுள்ள பிரதான வீதி வரை அழைத்து வந்தனர். அதன் பின் ஆயர் அவர்கள் தமிழ்ப் பண்பாட்டு முறைப்படி மாலையிட்டு வரவேற்க்கப்பட்டார். பின் பாடசாலை மாணவர்களின் மேற்கத்திய மகிழ்வொலியோடு ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து ஆயர் அவர்கள் இயேசுவின் விண்ணேற்ப்புப் பெருவிழாத் திருப்பலியை ஒப்புக் கொடுத்து பங்கிலிலுள்ள 39 இளம் பிள்ளைகளுக்கு உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் வழங்கினார். இத் திருநிகழ்வில் சிலாவத்துறைப் பங்கில் உள்ளடக்கப்பட்ட கிளை ஆலயங்களான முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலய மக்கள், கயாக்குளி தூய யூதா ததேயு ஆலய மக்கள், கொக்குப்படையான் தூய யாகப்பர் ஆலய மக்குள், பொற்கேணி கார்மேல் மாதா ஆலய மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பங்குத் தந்தை அருட்பணி.செ.தவறாஜா அடிகளார் பங்கு அருட்பணி உறுப்பினரோடும், பங்கில் பணியாற்றும் அருட் சகோதரிகளோடும் இணைந்து அனைத்து நிகழ்வுகளையும் ஒழுங்கமைத்து நெறிப்படுத்தியிருந்தார்.